உலக வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு 3 இலட்சம் இராணுவ வீரர்களுடன் மிகப்பெரும் இராணுவப் பயிற்சியை ரஷ்யா முன்னெடுத்து வருகின்றது.
கிழக்கு சைபீரியாவில் ஒரு வாரம் நடைபெறும் இந்த பயிற்சியில் 3 இலட்சம் இராணுவ வீரர்கள், 36 ஆயிரம் இராணுவ வாகனங்கள், ஆயிரம் விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன.
மேலும் ரஷ்ய படையில் சமீபத்தில் இணைக்கப்பட்ட இஸ்கந்தர் ஏவுகணைகள், டி-80 மற்றும் டி-90 பீரங்கிகள், எஸ்.யு.34, எஸ்.யு.35 போர் விமானங்கள் என ஏராளமான இராணுவ தளவாடங்களும் இந்த இராணுவ பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பயிற்சியில் சீன இராணுவத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 200 வீரர்கள் மற்றும் மங்கோலிய இராணுவ வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இது குறித்து ரஷ்ய இராணுவ அமைச்சர் செர்ஜெய் ஷோயிகு தெரிவிக்கையில்,
‘36 ஆயிரம் இராணுவ வாகனங்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயிற்சியில் ஈடுபடுவதை கற்பனை செய்து பாருங்கள். இவை அனைத்தும் முடிந்தவரை ஒரு போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் சிரியாவில் ரஷ்யாவின் மோதல்போக்கு, மேற்கத்திய நாடுகளின் நலன்களில் ரஷ்யாவின் தலையீடு போன்ற விவகாரங்களால் ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்த போர் பயிற்சி மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த பயிற்சிக்கு நேட்டோ அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.