இந்தியாவின் தினத்தந்தி நாளிதழ் செய்தியால் தமிழ்நாடு குழப்பநிலையில் உள்ளது. போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி நடந்தது என்ன? என்ற மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கூறினார் என்கிறது
“ஆணையத்தில் நான் ஏற்கனவே அளித்த சாட்சியத்தின் தொடர்ச்சியாக சில சந்தேகங்களை எழுப்பினேன். போயஸ் கார்டனில் ஜெயலலிதா கீழே விழுந்தார் என்பது சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபணமாகி இருக்கிறது. போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதாவை ஆம்புலன்சில் கொண்டு சென்றது யார்? ஆம்புலன்சுக்கு போன் செய்தது யார்? என்ற மர்மம் நீங்கவில்லை.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா கீழே விழுந்த போது, வீட்டின் உள்ளே சசிகலாவுடன் 2 பணிப்பெண்கள் இருந்துள்ளனர். அந்த பணிப் பெண்கள் எங்கே? அவர்கள் ஏன் விசாரிக்கப்படவில்லை. அப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் யாரையும் அனுமதிக்கவில்லை என்பதை எடுத்துரைத்துள்ளேன்.
ஆம்புலன்சில் சென்றபோது, ஜெயலலிதா மயங்கிய நிலையில் எடுத்து சென்றதாக சாட்சியங்கள் கூறி உள்ளனர். இது சசிகலா சொன்ன வாக்குமூலத்துக்கு எதிராக உள்ளது. சசிகலாவின் பிரமாண பத்திரத்தில், ஆம்புலன்சில் சென்றபோது, ஜெயலலிதா “நான் எங்கே போகிறேன்” என்று கேட்டதாக குறிப்பிட்டு உள்ளார். மயக்க நிலையில் அப்பல்லோ வைத்தியசாலை வரை கொண்டு செல்லப்பட்டதாக மற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.” என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகிய பின் செய்தியாளர்களிடம் மனோஜ் பாண்டியன் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.