கடந்த சனிக்கிழமை இலண்டனில் அவைக்காற்று கலைக்கழகத்தின் 40 ஆண்டு நிறைவினை முன்னிட்டு பெருவிழாவாக “தமிழ் நாடக விழா” நடைபெற்றுள்ளது. நாடக தம்பதிகள் என வர்ணிக்கப்படும் நாடகர்களான பாலேந்திரா மற்றும் ஆனந்தராணி ஆகியோரின் வழிநடத்தலில் அவைக்காற்று கலைக்கழகம், இலங்கையில் பிறந்து வளர்ந்து இலண்டனில் விருட்சம் கண்டு 40 ஆண்டுகளை தொட்டு நிற்கின்றது. இது சாதாரண விடயமல்ல.
சுமார் 70 க்கும் மேற்பட்ட நாடகங்களை தயாரித்து இயக்கியிருக்கும் திரு பாலேந்திரா, கடந்த காலங்களின் தொகுப்பாக இந்நிகழ்வினை நடாத்தியிருக்கின்றார். 40 ஆண்டுகளுக்கு முன் மேடையேற்றம் கண்ட கண்ணாடி வார்ப்புகள் நாடகமும் அதே சிறப்புடன் இன்றும் மேடையேறி பலரதும் பாராட்டைப்பெற்று இருக்கின்றது. நீண்ட பயணம் எனும் தலைப்பில் தமது கடந்த கால நாடகங்களில் இருந்து சிறப்பான அரங்காடலை தொகுத்து வழங்கிருந்தார்கள்.
இலண்டனில் உள்ள இளைய தலைமுறையினரை உள்வாங்கி இவர்களது அரங்கப்பயணம் நீண்டு செல்கின்றது. அரங்கம் நிறைந்த ரசிகர்களுடனும் இலக்கிய ஆர்வலர்களுடனும் தமது 40 ஆண்டுகால சாதனைகளை பதிவு செய்திருக்கின்றார்கள் இந்த அரங்காடல் தம்பதியினர்.