”நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களும் உறுதியற்ற தன்மையும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. போர் அழிவுத் துயரத்திலிருந்தும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் நாடு மீண்டெழ முன்பே இத்தகைய நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பது நாட்டுக்கு மேலும் பின்னடைவையே தரும். என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் முழு விவரம் இதோ:
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களும் உறுதியற்ற தன்மையும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. போர் அழிவுத் துயரத்திலிருந்தும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் நாடு மீண்டெழ முன்பே இத்தகைய நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பது நாட்டுக்கு மேலும் பின்னடைவையே தரப்போகிறது. இது மக்களுடைய எதிர்பார்ப்புக்கும் தேவைகளுக்கும் எதிரானதாகும். இந்தச் சூழலைப் பயன்படுத்தி வெளிச்சக்திகள் இலங்கையில் தமது செல்வாக்கை வலுப்படுத்த விழைகின்றன. இதனை யாருமே ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆகவே பொறுப்புக்குரியவர்கள் உடனடியாக நிலைமைகளைச் சீரமைத்து நாட்டை நிலைப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு புதிய ஆட்சியும் புதிய அரசியலமைப்பும் உதவும் என்ற நம்பிக்கையோடிருந்த மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவே நாட்டின் தற்போதைய நிலைமைகள் அமைந்துள்ளன. இது மக்களுக்கு விரோதமான நடவடிக்கையாகும். உரிய காலத்தில் உரிய விடயங்களைச் செய்யத் தவறியதன் விளைவே இது. வெளிப்படைத்தன்மையும் பிரச்சினைகளுக்கு நேர்மையாகத் தீர்வு காண வேண்டும் என்ற அக்கறையும் இருந்திருந்தால் இந்த நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்காது. மீளிணக்கம், கடந்த காலப் படிப்பினைகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் மக்களை அறிவுறுத்திக் கொண்டிருந்த தலைமைகள் இன்று தாமே தவறான முன்னுதாரணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றமை வருத்தத்திற்குரியது. இனமுரண்பாட்டினால் ஏற்கனவே நாடும் மக்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளமை நாமெல்லோரும் அறிந்தது. இனமுரண்பாட்டைப் பயன்படுத்தி வெளிச்சக்திகள் நாட்டில் தலையீடுகளைச் செய்ததையும் நாமறிவோம். இப்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாட்டினால் மேலும் அத்ததைய பாதிப்புகளும் வெளியாரின் தலையீடுகளும் அதிகரிப்பதற்கான நிலையை ஏற்படுத்தியுள்ளன என்பதை நிலைமைகள் துலக்கமாகக் காட்டுகின்றன.
இது நாட்டின் இறைமைக்கும் வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலானது. நமக்கிடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளவும் பரஸ்பர மதிப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் தவறியதன் விளைவுகளே இவையாகும். இதனை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். ஆகவே இந்தக் குறைபாடுகளை இனங்கண்டு உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும். அதுவே நாட்டைப் பாதுகாப்பதற்கும் மக்களுக்கான ஆட்சியொன்றை உறுதிப்பாட்டுடன் ஏற்படுத்துவதற்குமான வழியாகும்.
இதேவேளை இன்றைய அதிகாரப் போட்டிச் சூழலில் தமிழ்மொழிச் சமூகத்தினர் மிக நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். கட்சி நலன், தலைமைகளின் விருப்பம் என்பதற்கு அப்பால், மக்களின் நீண்டகால நலன்கள், பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தலைமைகள் சிந்திக்க வேண்டும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இதில் கூடுதலான வாய்ப்புகளும் பொறுப்புகளும் உண்டு.
நாட்டின் தலைவிதியைத்தீர்மானிக்கக் கூடிய அளவுக்கு புதியதொரு வாய்ப்பை இன்றைய அரசியல் சூழல் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளது. கடந்த காலத்தில் விட்ட தவறுகளைப் போல இதையும் பெறுமதியற்ற விதத்தில் கையாளாமல் புத்திபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களுக்கும் இலங்கைத்தீவுக்கும் வரலாற்றுப் பெறுமதியான எதிர்காலத்தை உருவாக்க முடியும். ஆகவே சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் நன்மையை முதன்மைப்படுத்தித் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.