கனடாவில் வருடா வருடம் பொங்கல் தினத்தினை முன்னிட்டு தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் “டுறம்” சிறப்பு நிகழ்வுகளை பிக்கறிங் ரவுன் சென்ரரில் நடாத்தி வருவது யாவரும் அறிந்ததே. தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் ஒரு அங்காடியில் ஆறு வருடங்களாக தொடர்ந்து செய்வதற்கான முக்கிய நோக்கம், தமிழ் மரபுத் திங்களின் பெருமையையும், தமிழ் மொழியையும் வெளி உலகத்தோருக்கும் தெரியப்படுத்துவதற்காகவும், தமிழ் மொழியின் ஈர்ப்பு சக்தியை உணர்த்துவதற்காகவுமே ஆகும்!
அந்த வகையில் இவ் வருடமும் TCASD தலைவர் திருமதி வாசா நாதன் தலைமையில் பொங்கல் தின சிறப்பு விழா மிகவும் கோலாகலமாக கடந்த சனிக்கிழமை ஜனவரி 19 ஆம் திகதி 2019, அன்று நடைபெற்றது.
இந் நிகழ்வினை மேலும் சிறப்பிற்கும் விதமாக மேடைப் பேச்சுக்கள், சிலம்பாட்டம், பரதநாட்டியம், தமிழ் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் இனிய பாடல்கள் என்பனவும் இடம் பெற்றன. பிரதானமாக தொல்காப்பியர் எனும் தலைப்பை மையமாக வைத்து இவ் வருடம் நிகழ்வுகள் நடைபெற்றன.
முக்கிய அம்சமாக தவில் மற்றும் நாதஸ்வர இசையுடன் அங்கு நடைபெற்ற ஊர்வலம் எல்லோரின் மனதையும் கவர்ந்து கொண்டமை இங்கு குறிப்பிடுதல் அவசியம். இந் நிகழ்வானது காலை 11 மணியளவில் ஆரம்பித்து மாலை நான்கு மணியளவில் இனிதே நிறைவு பெற்றன.
தமிழர் கலாச்சாரத்தின் அடையாளமான இப் பொங்கல் தினத்திலே பிரதம அதிதிகளாக ஏஜக்ஸ் நகர எம் பி மதிப்பிட்குரிய மார்க் ஹொலண்ட், பிக்கெரிங் நகரசபை மேயர் டேவ் ரயன், கவுன்சிலர்கள் கெவின் அசி, மோரிஸ் பிரென்னர், விட்பீ நகர சபை கவுன்சிலர்கள் மலிகா ஷாஹித், ஸ்டீவ் யமாட, ஏஜக்ஸ் நகரசபை கவுன்சிலர்கள் ஸ்டெர்லிங் லீ, மர்லின் கிராபோர்ட், பொது நலத் தலைவர் நீதன் ஷான், பாடசாலை அறங்காவலர்கள் பார்தி கந்தவேள், அணு ஸ்ரீஸ்கந்தராஜா, மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் சேர்ந்து பொங்கல் பானையில் அரிசி போட்டு பொங்கலை ஆரம்பித்து வைத்தமை சிறப்பாக அமைந்திருந்தது.
இப் பொங்கல் தினத்தை முன்னிட்டு சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் – 2018 பட்டத்தை வென்ற பரா வீரகத்தியார் பாரதியார் பாடல் ஒன்றினைப் பாடி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மதிப்பிற்குரிய மருத்துவ வைத்தியர் திரு. வரகுணன் மஹாதேவன் அவர்கள் தொல்காப்பியம் பற்றிய விளக்கவுரையை மிக அழகாக ஆற்றினார்.
இவ் நிகழ்வுகளை ஈழத்தாய் செய்திகள் மற்றும் தமிழ் ஒன் தொலை காட்சி தாபனம் நேரடி ஒளி பரப்பு செய்தார்கள். அத்துடன் தமிழ் மிர்ரெர் செய்திகளும், இந்த விழாவுக்கு ஆதரவு அளித்தார்கள்.
முதல் நாளன்று வெள்ளிக்கிழமை ஜனவரி 18 ஆம் திகதி 2019, தமிழ் மரபுத்திங்கள் கொடியேற்றும் விழா நான்காவது வருடமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்ச்சியில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட மேயர் டேவ் ரயன், கவுன்சிலர்களான ஷாஹின் பட், மோரிஸ் பிரென்னர், டேவ் பிக்கிள்ஸ் ஆகியோர் கொடியேற்றி நிகழ்ச்சியினை சிறப்பித்திருந்தார்கள்.
புலம் பெயர்ந்து வந்து குடியேறிய நாட்டில் எமது பாரம்பரிய கலாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடைபெற்ற இவ் சிறப்பு நிகழ்ச்சிகளானது கண் கொள்ளாக் காட்சியாகவும் மனத்தைக் கவர்ந்த நிகழ்ச்சியாகவும் அமைந்திருந்தமை மிகவும் பாராட்டுதற்குரியது.
கனடாவில் தமிழர் தம்முடைய மரபுரிமையைப் பேணும் நோக்கில் ஆண்டு தோறும் தைத்திங்களில் தமிழர் மரபுரிமை நிகழ்வுகளை முன்னெடுத்து வருபது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
இந்த மரபுரிமை செயட்பாட்டை ஆரம்பித்து முன்னெடுத்து வரும் கனடியத் தமிழர் மையத்தினர் தற்போது தமிழர் மரபுத் திங்களுக்குரிய நிரந்தர இலச்சினையையும் கொடியையும் உருவாக்கியுள்ளனர்.
பலரது கருத்துக்களையும் உள்வாங்கி உருவாக்கப்பட்ட இந்த இலச்சனை பற்றிய விளக்கக் குறிப்புகள் பற்றி தமிழ் கலாச்சார அறிவியல் சங்க பிரதிநிதிகள் குறிப்பிடுகையில்;
“இலச்சினையின் நடுவே காணப்படுகின்ற முரசு தமிழர்களின் முதன்மைக் குறியீடாக அமைகின்றது. தமிழர்களின் பாரம்பரியக் கலைகளின் அடையாளமாகவும் எழுச்சியை ஏட்படுத்தும் ஒலியைத் தருவதால் எழுச்சியின் அடையாளமாகவும் நோக்கப்படுகின்றது. பண்டைய தமிழர் முரசறைந்தே செய்திகளைப் பரப்பினர். தமிழர் தமது இனச் சிறப்புகளை எங்கும் பரப்புதல் என்ற கருத்தும் இதில் அடங்கியுள்ளது. முரசில் காணப்படும் கறுப்பு மஞ்சள் நிறங்கூட தமிழர்களின் விடுதலை எழுச்சியைக் குறிப்பதாகும்.
கதிரவ ஒளிக் கற்றைகள் போல் காணப்படுபவை தமிழ் ஏடுகளாகும். தமிழ் மொழியே கதிரவனாகத் தமிழர்களை காத்து வருகின்றது. தமிழ் இலக்கண இலக்கியங்களே என்றும் எமது பண்பாட்டு அடையாளங்களைச் சுமந்து செல்ல வல்லவை. மொழியே எமது இருப்பு என்பதையும் அதுவே எம் காப்பு என்பதையும் இந்த ஏடுகள் குறிக்கின்றன. பன்னிரண்டு ஏடுகள் உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டையும் குறிக்கின்றன. முரசை சுற்றி இருக்கும் உலக வரைபடம் புலம் பெயர்ந்து வாழும் அனைத்துத் தமிழர்களையும் குறிக்கின்றது. இந்த இலச்சனை கனடாவில் உருவாக்கப்பட்டாலும் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களுக்கும் பொதுவானது.
முரசைத் தாங்குவது போல் கீழே காணப்படும் இரண்டு தளிர்கள் தொடர்ந்தும் தமிழருடைய மரபுரிமைகளைப் பேணிச் செல்லும் இளைய தலைமுறையினரை குறிப்பதாகும். உயிர்களின் முதல் ஒலியாகவும் தமிழ் மொழியின் முதல் எழுத்தாகவும் திகழும் ‘அ’ முரசின் மேல் இடம் பெற்று இருக்கின்றது.
‘யாதும் ஊரே’ என்ற தமிழரின் பண்பாட்டு சொற்றொடர் உலகம் எங்கும் எல்லோரையும் அரவணைத்து எல்லா இனங்களோடும் கூடி வாழும் உயர்ந்த சிந்தனையை வெளிப்படுத்துகின்றது. கதிரவன் தோற்றம் கொள்ளும் காலைப் பொழுதையும் தமிழர்களின் நிறங்களான சிவப்பு மஞ்சளையும் குறிப்பதாகக் கொடி அமைக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தனர்.
.
டாக்டர் வரகுணன் ஆற்றிய உரை;
https://www.facebook.com/vara.mahadevan.1/videos/10161608293565724/
.
சீனியர் சூப்பர் சிங்கர் பரா வீரகத்தியர் பாடல்;