முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்துவருட நிகழ்வுகள் உலகமெங்கும் நடைபெற்று வந்த நிலையில் இலண்டனில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி பலரது கவனத்தைப் பெற்றது. இலண்டனில் இயங்கும் தமிழர் தகவல் நடுவம் ஒழுங்குசெய்த இந்த கண்காட்சி ஈழதேசத்தில் தமிழரின் வாழ்வியல் பரம்பலை காலப் பாகுபாட்டுடன் தொகுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
தொண்மையான ஒரு மனித இனத்தின் வளத்தினையும் இருப்பினையும் எடுத்துச்செல்வதில் ஈழத்தமிழர் மிகப்பெரிய வரலாற்றுப் பாதையை கடந்துகொண்டு இருக்கும் வேளையில் மிகவும் தேவையான பதிவாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. மறைந்த திரு வரதகுமாரின் முயற்சியில் நீண்டகாலம் திட்டமிடப்பட்டு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அவரது கனவு நிறைவடையும் போது அவர் இல்லை.
ஈழத்தமிழர் வரலாற்றின் அதி முக்கிய சம்பவங்களின் புகைப்படங்கள், முக்கிய செயல்பாட்டாளர்களின் புகைப்படங்கள், தமிழ் நூல்கள், கலை கலாச்சார காட்சிப்பொருட்கள். ஈழ விடுதலைப்போராட்ட விடையங்கள் என நிரம்பியிருந்தன. விடுதலைப்புலிகள் முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்த நிழல் அரசின் பெரும்பாலான விடையங்கள் இணைக்கப்படிருந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை காட்டியிருந்தார்கள். மாதிரி வைத்தியசாலை அமைத்ததுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோபன், கின்ஸ்டன் நகர பிதா உட்பட பல் இன மக்களும் வருகைதந்ததுடன் ஜெர்மி கோபன் உரையும் ஆற்றியிருந்தார்.
கண்காட்சிக்கு “இலங்கைத் தமிழர்கள்” (Tamils of Lanka) என்று பெயர் வைத்திருந்தார்கள். “ஈழத்தமிழர்கள்” என வைத்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.