அண்மையில் பாடசாலைக்கு வந்த ஒரு சிறுவனுக்கு, இராணுவத்தினரைக் கண்டதும் வேர்த்துக் கொட்டியது. அவன் தரம் ஒன்றில் கல்வி கற்கின்ற மாணவன். உடனேயே அழத் தொடங்கினான். திரும்பி தயாருடன் செல்லப் போவதாக அழுதான். இப்போதும் அவனின் கண்களில் ஏதோவொரு அச்சம் சூழ்ந்திருப்பதாகவே அவனின் வகுப்பாசிரியர் கூறினார்.
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கை. இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இன்றும் இராணுவத்தினர் முகாம்கள் காரணமாக கேப்பாபுலவு உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர். வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ள மக்களின் கோரிக்கை இராணுவமே வெளியேறு என்பதே.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களுடன் இராணுவத்தினர் இதுதான் சந்தர்ப்பம் என்பதைப் போல வடக்கு கிழக்கில் இராணுவ மயத்தை அதிகரித்துள்ளனர்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களுடன் இராணுவத்தினர் இதுதான் சந்தர்ப்பம் என்பதைப் போல வடக்கு கிழக்கில் இராணுவ மயத்தை அதிகரித்துள்ளனர். சோதனைச்சாவடிகள், இராணுவப் பிரசன்னங்கள் அதிகரித்துள்ளதுடன், இராணுவ மயத்தை நியாயப்படுத்துகின்ற முயற்சிகள் இராணுவ ரீதியாகவும்அரசியல் ரீதியாகவும் முன்னெடுக்கப்படுகின்றன.
இதில் முக்கியமாக பலியாகியது பள்ளிக்கூடங்கள். இராணுவத்தினர் போர் முடிந்த பின்னர், பாடசாலைகளை இராணுவ மயப்படுத்துவது, பாடசாலை நிர்வாகச் செயற்பாடுகளில் இராணுவத் தலையீடுகளில் அதிகம் அக்கறையாய் இருந்தனர். கடந்த ஆண்டு மழை வெள்ளம் ஏற்பட்ட போதும், பாடசாலைகள் முழுவதும் தொலைபேசி நிறுவனம் ஒன்று அன்பளிப்பு செய்த புத்தக பைகளுடன் இராணுவம் நிறைந்தது.
அத்துடன் ஓவியப்போட்டி, சிறுகதைப் போட்டி, உதவிக்கு மாணவர் விபரம் தேவை என்றும் பாடசாலைக்கு இராணுவத்தினர் வருவதும் போவதும் அடிக்கடி நிகழ்கின்ற விடயம். இப்போது பெருந்தொகையான இராணுவத்தினர் பாடசாலை வாயில்களிலும் மைதானத்திலும் பிரார்த்தனை நேரத்திலும் நிற்கின்றனர். இராணுவத்துடன் பாடசாலை தொடங்கி இராணுவத்துடன் முடிகின்ற காலத்தில் இப் பிள்ளைகள் வாழ்கின்றனர்.
அண்மையில் யாழ் பாடசாலை ஒன்றில், குண்டுத் தோசைக்கு நடந்த கதி ஊடகங்கள் வாயிலாக அறிந்ததுதான். மாணவர்களின் புத்தகப் பைகள் சல்லடையிட்டு தேடப்படுகின்றது. உணவுப் பொட்டலங்கள் நசுக்கிப் பார்க்கப்படுகின்றது. மாணவர்களுக்கு இராணுவத்தினரின் இச் செய்கைகள் பெரும் அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் பாடசாலை செல்லும்போது, ஒரு அந்நியத்தை இது உணர்த்துகின்றது.
ஏற்கனவே, வடக்கு கிழக்கில் கல்வி நிலமை கடும் மோசமாய் இருக்கிறது. இலங்கையில் கல்வியில் பிந்திய மாகாணங்களாய் வடக்கும் கிழக்கும் இருக்கிறது. இந்த நடவடிக்கை இன்னமும் பின்தள்ளுகின்ற வேலையை செய்யப் போகின்றது. படிக்க வேண்டிய பிள்ளைகளின் கைகளில் பேனாக்கள் இருந்தாலும், அவர்களின் கண்களில் துப்பாக்கிகள் தெரிகின்றன. அந்தத் துப்பாக்கிகளால்தான் அவர்கள் குறிப்புக்களை எழுதப் போகிறார்கள்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தாயை, தந்தையை, உறவுகளை இழந்த பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள்.
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில், வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் நடாத்திய அராஜகங்கள் மறக்ககூடியவையல்ல. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி இன்னமும் வழங்கப்படாத நிலையில், இராணுவ மயத்தை அதிகரிப்பதும் அதன் ஊடாக, இனப்படுகொலைக்கான நீதியை நீர்த்துப்போகச் செய்வதுமான கனவுகளில் உள்ளது இராணுவம். உண்மையில் இவை இராணுவ வெறுப்பை அதிகரிக்குமே தவிர, இராணும்மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தாது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தாயை, தந்தையை, உறவுகளை இழந்த பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள். கையை, கண்களை, கால்களை இழந்த பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள். அவர்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஏற்படுத்திய வடு அழியாது. அதற்கான நீதியை கோரும் தமிழர்களின் போராட்டத்தில் தெய்வு ஏற்படக்கூடாது. அப்படி ஏற்பட்டால், அது இந்த குழந்தைகளுக்கு எதிரான செயலாகும்.
கல்வியின் அடைவு மட்டத்தை முன்னேற்றுவதற்கு இது அடிப்படையானது. போதைப் பொருள் பாவனை, இளவயது திருமணங்கள், திசைதிருப்பல் முயற்சிகள் என்று கல்விக்கு எதிரான பல்வேறு பொறிகளுடன் இராணுவ மயமும் எமது பிள்ளைகளின் கல்வியை வீழ்ச்சியுற வைக்கும். எனவே, பள்ளிகளை இராணுவ மயத்திலிருந்து மீட்டெடுப்பது அவசியமாகும். இதற்காக அழுத்தங்களை எமது தலைமைகள் கொடுக்க வேண்டும்.
வணக்கம் லண்டனுக்காக தீபச்செல்வன்