`மகாநடி’, `கேஜிஎஃப்’ உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள், நடிகர் – நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வுசெய்யப்பட்டு, ஆண்டுதோறும் விருது வழங்கிவருகிறது மத்திய அரசு. இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதை ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளியான `பாரம்’ படம் பெறுகிறது.
சிறந்த இந்திப் படத்துக்கான தேசிய விருது பெறுகிறது `அந்தாதூன்’. தமிழிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்த`மகாநடி’ திரைப்படம் சிறந்த தெலுங்கு படத்துக்கான தேசிய விருதைப் பெறுகிறது. சாவித்திரியாக `மகாநடி’யில் கலக்கிய கீர்த்தி சுரேஷ், சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெறுகிறார். சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது பெறுகிறது `மகாநடி.’
`பத்மாவத்’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் சஞ்சய் லீலா பன்சாலி. ஸ்பெஷல் எபெஃக்ட்ஸ் மற்றும் சிறந்த சண்டைக் காட்சிகளுக்கான விருது பெறுகிறது கன்னட திரைப்படமான கே.ஜி.எஃப். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மையமாக வைத்து வெளியான `உரி’ திரைப்படம் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெறுகிறது. சிறந்த சமூக விழிப்புணர்வு படமாக `பேட்மேன்’ படம் தேர்வாகியுள்ளது.
`பதாய் ஹோ’ படத்தில் நடித்த 74 வயதான சுரேகா சிக்ரி, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெறுகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட `சுடானி ஃபரம் நைஜிரியா’, சிறந்த மலையாளப் படத்துக்கான விருதைப் பெறுகிறது.