செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகளின் சடலத்தை சுமந்து சென்ற தந்தை

ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகளின் சடலத்தை சுமந்து சென்ற தந்தை

2 minutes read

தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகளின் சடலத்தை தந்தை சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பொத்தப்பல்லி மாவட்டத்தில் உள்ள கூனுறு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவரின் 7 வயது மகள் கோமளா கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரீம்நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோமளாவுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கோமளா பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பத் கையில் பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு மகளின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தித் தரும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தங்களிடம் இல்லை என கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த சம்பத் சுமார் 2 மணி நேரம் மருத்துவமனை முன்பு கண்ணீருடன் தவித்தார். யாரும் எந்த உதவியும் செய்யாததால் சம்பத் தன் மகளின் உடலை கைகளில் ஏந்தி மார்போடு அனைத்தபடி சுமந்து சென்றார். 50 கிலோ மீட்டர் தூரம் உள்ள தன் கிராமத்துக்கு செல்ல வேண்டிய நிலையில் மருத்துவமனையிலிருந்து சம்பத் வெளியேறிய போது அவரின் கண்ணீரும் அழுகையும் காண்போர் நெச்சை உலுக்கியது. ஆனால் இதை கண்டும் கூட மருத்துவமனையில் உள்ள யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

தன் மகளின் உடலை கையில் ஏந்தியபடி மருத்துவமனைக்கு வெளியே வந்து ஆட்டோ ஓட்டுனர்களிடம் சொந்த ஊருக்கு செல்ல உதவும்படி கேட்டுள்ளார். அப்போது ஒரு ஆட்டோ ஓட்டுனர் அவருக்கு உதவ முன்வந்ததை தொடர்ந்து சம்பத் தன் மகளின் உடலை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். தெலுங்கானா மாநிலத்தின் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஈட்டல ராஜேந்திரனின் சொந்த மாவட்டத்திலேயே ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகளின் உடலை தந்தை கையில் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More