பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன், செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு, கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும்.
வான்குஞ்சர்:
வண்டில் மாடுகளில் மட்டும் பிரயாணம் செய்து வந்த மூன்று கிராமங்களுக்கு ‘ராக்டர்களின்’ வரவைத் தொடர்ந்து குஞ்சுத்தம்பி எனும் நீவில் கிராமத்தவர் ஒருவர் வாங்கி ஓடவிட்ட தட்டி வான் பெரும் அதிசயமாயிற்று. வானின் முன்னிருக்கை ஒரு மரத்தாலான பெட்டி. வானின் பத்திரங்கள், சாரதி அனுமதிப்பத்திரம் அப்பெட்டியில் ஒரு பகுதியில் இருக்கும். சாவிகள் இன்னொரு பகுதியில். றைவர், உரிமையாளரின் மாற்றுடுப்புகள் இன்னொரு பகுதியில் வைத்த போதும் பிரயாணிகளின் பொருட்கள் வைப்பதற்கும் அதற்குள் இடமிருந்தது. றைவருடன் மூன்று பேர் முன்பகுதியில் நெருக்கி இருப்பார்கள். றைவருக்கு அருகில் இருப்பவர் ‘கியரின்’ இந்தப்பக்கம் ஒருகாலும், அந்தப்பக்கம் ஒருகாலும் வைத்து இருப்பார். பின்பக்கம் பலகையால் ஆன மூன்று இருக்கைகள். கடைசி இருக்கை சற்று நீளமானது. ஐந்து, ஆறு பேர் நெருக்கி இருந்து கொள்வர். ஏறுகின்ற பாதைக்கருகில் இருப்பதால் இரண்டாவது, மூன்றாவது இருக்கைகள் சற்று நீளம் குறைவு. அவற்றின் அருகில் பின்புறம் செல்வதற்கான பாதை. மிதிபலகையில் மேலேயுள்ள கரியரைப் பிடித்தபடி இரண்டு, மூன்று பேர் நிற்கலாம். பொலிசார் கண்டால் தண்டனை நிச்சயம். பின்பகுதியில் இரண்டு பகுதியில் சங்கிலி இணைக்கப்பட்ட பலகையொன்று. அதில் சிலவேளைகளில் பயணிகள் இருப்பர். கூரையில் நான்கு பக்கமும் கம்பியுள்ள ‘கரியர்’. பிரயாணிகளின் அரிசி, நெல் முதலியன மேலே ஏற்றப்படும்.
வான்குஞ்சரின் வான் வந்தபின் மீசாலை மக்களுக்கும் மூன்று கிராம மக்களுக்கும் உள்ள உறவு இன்னும் நெருக்கமாயிற்று. குஞ்சுப் பரந்தன் சந்தியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்படும் வான் விதானையார் வீடு, தபால்கந்தோர் சந்தி, சின்னையா கடை, மில் முதலிய இடங்களில் நின்று, நின்று புறப்படும். காலையுணவு சாப்பிடாதவர்கள் சின்னையா கடையில் இறங்கி தோசை, வடை சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து ஏறுவர். ஏழு, ஏழரைக்குப் புறப்படும் வான் பத்து, பத்தரைக்கு மீசாலை பழைய ஸ்ரேசனடிக்குப் போய்ச் சேரும்.
மூன்று கிராமத்தவர் பெரும்பாலும் உறவினராகவும் அல்லது மூன்று, நான்கு தலைமுறைக்குக் குடும்ப நண்பர்களாகையால் பிரயாணம் மிகவும் சுவராஸ்சியமாயிருக்கும். பல கதைகளும் மிகவும் சத்தம் போட்டுக் கதைப்பார்கள். அம்மன் கோவில் வேள்வி, காளி கோவில் பொங்கல், பள்ளமோட்டைப் பிள்ளையாரின் உடுக்கடிப் பாடல்கள், தேர்தல், எம்.பி.குமாரசாமி பற்றியெல்லாம் கதைத்துக் கொண்டு வருவார்கள்.
குஞ்சரின் வான் ஒருவகை பார்சல் சேவை, தபாற் சேவையையும் செய்தது. நேரில் போக முடியாதவர்கள் அரிசி, நெல் முதலியவற்றை குஞ்சரிடம் கொடுத்து விடுவர். கடிதங்களும் அவ்வாறே. குஞ்சர் அவற்றைக் கொண்டு சென்று பழைய ஸ்ரேசனடி, ஐயா கடை, சங்கத்தானை முதலிய இடங்களிலுள்ள கடைகளில் இறக்கி வைத்து உரியவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்வார். சாவகச்சேரி நகருக்குள் குஞ்சர் பெரும்பாலும் வானைக் கொண்டு செல்லார்.
ஒரு மணி போல் சங்காத்தானையில் மீள்பயணத்தை ஆரம்பிக்கும் வான் மாலை ஐந்து மணியளவில் மூன்று கிராமம் வந்து சேரும். மீசாலை உறவினர்கள் கடிதம், தேங்காய், மாங்காய், பலாப்பழம் முதலியவற்றை வான் குஞ்சரிடம் கொடுத்து மூன்று கிராம மக்களுக்கு அனுப்பிவிடுவர். சிலவேளைகளில் நாங்கள் ஐயா, அம்மா, மூன்று சிறுவர்கள் வானில் பயணம் செய்ததுண்டு. ஒரு கிழமைக்கு முன்னரே ஐயா குஞ்சரிடம் சொல்லி வைத்து விடுவார். ஐயாவிற்கு முன்சீற்றில் ஓரிடமும் எங்கள் குடும்பத்துக்கு இரண்டாவது இருக்கையும் முன்பதிவு செய்தமாதிரி வெற்றிடமாகக் கொண்டு வந்து பெரும் ஆர்ப்பாட்டமாக குஞ்சர் எங்களை ஏற்றுவார். நாங்கள் கோணர் சீற்றுக்கு அடிப்பிடிப்படுவோம். சின்னையா கடைக்குப் போவதற்குள் மூன்று நான்கு பெண்கள் ஏறிவிடுவர். “தம்பி நீங்கள் சின்னப்பிள்ளைகள்தானே மடியில் இருங்கள்” என்று கூறி எங்களை மடியில் இருத்துவர். அம்மா என்றாலும் கோணர் சீற்றில் இருக்கிறாதானே என்று மகிழ்வோம். பெண்கள் பெரும்பாலும் வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள். துப்புவதற்கு வசதி என்று கூறி அம்மாவையும் நடுப்பக்கத்திற்குத் தள்ளிவிடுவர். ஐயா என்றாலும் முன்னுக்கு வசதியாக இருக்கிறாரென்று மகிழ்வோம்.
மூன்றாம் கட்டையில் ரங்கூன் மணியத்தாரின் வீடு. அவர் ஞாயிறு தவிர்த்து ஆறு நாளும் சங்கத்திற்குப் போவார். நல்ல ஆரோக்கியமான நாட்களில் தனது காணியின் பின்புறமாயுள்ள காஞ்சிபுரப்பாதையில் நடந்து, குமரபுரம் ஊடாகப் பரந்தன் சந்தியை அடைவார். குடை பிடித்தபடி பெரிய செருப்புக்களை அணிந்து, வேட்டியை மடித்துக் கட்டியபடி அவர் நடந்து செல்லும் அழகே அழகு. சற்று சுகயீனம் என்றால் கார்க்கார நாதன் வந்து காத்திருந்து அவரை ஏற்றிச் செல்வார். அபூர்வமாக அவரும் வானில் வருவது உண்டு. அதுவும் சொல்லி வைத்த மாதிரி நாங்கள் போகும் நாட்களிலேயே அவரும் வருவார். அவரது மனைவியின் ஊர் சங்கத்தானை. அவரை ஏற்றுவதற்காக ஐயாவும் இன்னொருவரும் இறங்குவர். குஞ்சர் ஐயாவிற்கு ஒரு மாதிரி கடைசி சீற்றில் ஒரு இடம் பிடித்துக் கொடுப்பார். முன் சீற்றுக்கு ஆசைப்பட்ட மற்றவரின் பயணம் மிதி பலகையில் தொடரும். ரங்கூன் மணியத்தார் கௌரவத்தில் மட்டுமல்ல தோற்றத்திலும் பெரியவர். அவரும் றைவரும், கியரின் இருபக்கமும் கால் போடுபவரும் மட்டுமே இருக்கமுடியும். சிறுவர்களாகிய நாங்கள் பெண்களின் முக்கல் முனகல்களுக்கும் அவர்களின் வெற்றிலைச் சாற்றுக்கும் பயந்து பெரும்பாலும் நின்று கொண்டே பயணம் செய்வோம். ஐயா என்னதான் முன்கூட்டியே கூறிவைத்தாலும் குஞ்சரின் வான் பயணம் தொடர்ந்து இவ்வாறாகத்தான் செய்தது. ஆனாலும் அதிலும் ஓர் இனிமை இருக்கத்தான் செய்தது. மேலும் சிறுவர்களையும் இளம் பெண்களையும் குஞ்சரை நம்பி இரண்டு பயணங்களிலும் தனியே அனுப்பக் கூடியதாக இருந்தது.
கிளி/பரந்தன் அ.த.க.பாடசாலை இடம்பெயர்ந்த போது குஞ்சர் நீவிலில் உள்ள தனது காணியில் பாடசாலை நடத்த அனுமதியளித்தார். அப்போது அவ்விடத்தில் நிரந்தரமாக ஒரு பாடசாலை அமையுமாயின் பாடசாலைக்குக் காணி உரியதென்றும், மீளக் குடியேறும் பட்சத்தில் காணியைத் தன் வாரிசுகளிடம் கொடுக்கும் படியும் எழுதிக் கொடுத்தார். ஆயினும் எண்பத்தைந்து, தொண்ணூறு வயதாகியும் குஞ்சர் இன்னும் உயிருடன் உள்ளார்.
தொடரும்….
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.
முன்னையபகுதிகள் ….
http://www.vanakkamlondon.com/periya-paranthan/
http://www.vanakkamlondon.com/periyaparanthan-2/
http://www.vanakkamlondon.com/periyaparanthan-3/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-4/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-5/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-6/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-7/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-8/
http://www.vanakkamlondon.com/periya-paranthan-9/