காய்கறிகளை மரக்கறி என்றும் அழைப்பர். முதன்மை உணவின் பகுதியாகவும் நொறுக்குத்தீனிகளாவும் பல்வேறு வகைகளில் மரக்கறி உள்ளெடுக்கப் படுகின்றன. யாழ்ப்பாணக் குடா நாடு விவசாயத்தினை தன்னகத்தே கொண்ட பூமியாகக் காணப்படுகின்றது. அதிக விளைச்சல் தரக்கூடிய மரக்கறிகளினையும் பழங்களினையும் தரைக்கு கீழ் உள்ள நீரினை பயன்படுத்தி உற்பத்தி செய்வதனை இன்றும் காணலாம். அத்துடன் சிறப்பான மரக்கறிகளாக பாகல், புடோல், வெண்டி, சின்னவெங்காயம், மட்டுவில் கத்தரிக்காய்
கீரை, சின்னவெங்காயம் இவை போன்றவை யாழ்ப்பாணம்.சுன்னாகம், சங்கானை . சாவகச்சேரி கொடிகாமம் சந்தைகளில் விற்பனைக்கு இருக்கும்
****
மட்டுவில் (Madduvil) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய கிராமம். மட்டுவில் சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள வரலாற்றுப் பழைமை கொண்ட ஓர் இடம். மட்டுவில் கிராமம் என்றதும் எம் மனதில் உடன் நினைவுக்கு வருவது வெள்ளை நிற முட்டை போன்ற சுவையான கத்தரிக்காயும், பன்றித்தலைச்சி அம்மன் கோவில் மட்டுமே. அம்மன் கோவில் பொங்கல் அன்று மட்டுவில் கத்தரிக்காய் கறி பொங்கலோடு சேர்த்து உண்ண பக்தர்களுக்கு நிச்சயம் சந்தர்ப்பம் இருக்கும்.
என்னோடு கொழும்பில் தொலை பேசி திணைக்களத்தில் ஒன்றாக வேலை செய்து பின் துபாயில் வேலை செய்த ராஜலிங்கம் என் வெகு கால நண்பன். அவர் பிறந்து, வளர்ந்த ஊர் மட்டுவில். படித்தது சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி (Chavakachcheri Drieberg College) அவரின் தந்தை மகாலிங்கம், ஒரு விவசாயி ஏழு ஏக்கர் செம்மண் தொட்டத்துக்கு சொந்தக்காரன் . தோட்டத்தில் உள்ள நன்னீர் கிணற்றில் நீர் இரைத்து விவசாயம்செய்த , பலசாலி மாகாலிங்கம். அவருக்கு மூன்று மகன்கள். மூவரும் அவருக்கு பெரும் உதவி. அதில் மூத்தவர் ராஜா என்ற என் நண்பர் ராஜலிங்கம். அவரின் மற்ற சகோதரர்கள் இருவரும் கனகலிங்கமும் , சிவலிங்கமும். தோட்டத்துக்கு நீர் இரைக்கும் போது துலா மிதித்து உதவுவது அவர்கள் லீவில் சென்று ஊருக்கு போகும் நேரம் ராஜாவும் தந்தைக்கு உதவினார்.
வெறும் மேலுடன் தன் உடலில் வியர்வை சிந்த தந்தை வேலை செய்வார் என ராஜா எனக்கு சொல்லுவார் .
“ராஜா உமது தந்தை எப்போதாவது சுகமில்லாமல் இருத்தவரா” நான் ராஜாவிடம் கேட்டேன்
அவர் சிரித்து விட்டு சொன்னார் “அது தான் வேடிக்கை. ஒரு தடவை மட்டும் அவர் காலில் மண்வெட்டியால் ஏற்பட்ட காயம் மட்டுமே . அவருக்கு சக்கரை இருதைய நோய்கள் இல்லை.
அவரின் கடும் உழைப்பு அவரின் உடலில் நோய்கள் வராது செய்து விட்டது. அவருக்கு வயது அறுபது அந்த வயதிலும் சில மைல்கள் ஓடக் கூடிய சக்தி அவருக்கு இருந்தது. தன் மூன்று மகன்களை படிப்பித்து திருமணம் செய்த வைத்தவர் அவர். அவருக்கு உதவியது அவரின் மரக்கறித் தோட்டம்” ராஜலிங்கம் பெருமையோடு தன் தந்தை பற்றி சொன்னார்.
அவரின் தந்தையை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் வந்தது.
“ராஜா அடுத்த தடவை நீர் உம் ஊருக்குப் போகும் போது நானும் உம் கூடவே வருகிறேன்” என்றேன்
“அதுக்கு என்ன இன்னும் ஒரு மாதத்தில் மட்டுவில்லுக்கு போக இருக்கிறேன். நீர் தாராளமாய் என்னுடன் வரலாம்” என்றார் ராஜா.
****
அதுவே எனது முதல் யாழ்ப்பாணக் குடா நாட்டு பயணம். நான் பிறந்து, வளர்ந்து, படித்தது கொழும்பில். ஒருபோதும் யாழ்ப்பாணம் சென்றதில்லை. ஆனால் கொக்குவில்லில் பிறந்த என் தந்தை யாழ்ப்பாண குடா நாடு பற்றி பெருமையாக அடிக்கடி எனக்கு சொல்லுவார். அவரை கொக்குவில் ஊர்வாசிகள் ஒதுக்கி வைத்தார்கள் காரணம் அவர் காதலித்து திருமணம் செய்தது கொழும்பில் வாழ்ந்த சிங்களப் பெண் துலானியை. . என் தாய் நான் யாழ்ப்பாணம் போவதை விரும்பவில்லை .
***
ராஜும் நானும் கொழும்பில் இருந்து வாடகை காரில் புத்தளம் அனுராதபுரம் வவுனியா ஊடாக மட்டுவில் சென்றோம். ராஜாவின் வீடு பழமை வாய்ந்த கல் வீடு. அந்த வீட்டுக்கு அருகில் இருந்த அவர் தந்தையின் பச்சை பசேல் என்ற கத்தரித் தோட்டத்தை பார்த்ததும் பரவசமானேன். அதை தொப்பியுடன் போலீஸ்காரனை போல் காவல் காப்பவனை பார்த்தும் சலூட் அடித்தேன் .
நான் செய்ததை பார்த்து ராஜாவின் தந்தை சிரித்தார்
“என்ன தம்பி என் கத்தரித் தோட்டத்து காவல்காரனுக்கு சலூட் அடிக்கிறீர்”?
“இல்லை ஐயா இரவு பகல், .மழை வெய்யில், என்று பாராமல் உங்களிடம் சம்பளம் வாங்காமல் உங்கள் தோட்டத்தை காவல் செய்கிறாரே, அதுக்கு அவரின் சேவைக்கு சலூட் அடித்தேன்”
“அது சரி தம்பி நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் கத்தரி தோட்டத்து வெருளி பாடலை கேள்விபட்டிருக்கிறீரா”?
“இல்லை ஐயா யார் அந்த சோமசுந்தரப் புலவர். அவர் இந்த ஊரா“?
“உம்மை குறை சொல்ல முடியாது இந்த புலம் பெயர்ந்த இளம் சந்ததிகளுக்கு அவரை பற்றி எப்படி தெரியும்? அவர் நவாலியூரை சேர்ந்தவர் அதனால் அவரை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் என்பர். என் தந்தையோடு படித்தவர் அவரை பற்றி என் தந்தை அடிக்கடி சொல்லுவார். இவர் பிறந்தது மே 25, 1878 யில் நவாலி, யாழ்ப்பாணத்தில் அவரின் இறப்பு ஜூலை 10, 1953 அகவை 75 ல்.
“அது சரி ஐயா அப்படி என்ன விசேசமாக அவர் பாடியவர் “?
“இதோ அவர் பாடியதை பாடுகிறேன் கேளும். என்று இனிமையான குரலில் பாடத் தொடங்கினார்.
ஐயா நான் கிராமத்து பாடல்களை பதிவு செய்து வருகிறேன் என் பதிவுக் கருவியை தயார் செய்தேன். அவர் குருவிகளின் சத்தத்தின் பிண்ணயில் தன் இனிமையான குரலில் பாடத் ஆரம்பித்தார்.
பாடலின் பதிவை ஆரம்பித்தேன்.
“கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! – நின்று
காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! – உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்?
கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! – என்றும்
காவல் புரிகின்ற சேவகா!
எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்? – என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்?
வட்டமான பெரும் பூசினிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!
தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! – கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! – ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!
பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ? – உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ?
வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே – வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே
கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே – கூடிக்
கத்திக் கத்திக் கரைந்தோடுமே
நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
நடுநடுங்கி மனம் வாடுமே – ஏங்கி
நடுநடுங்கி மனம் வாடுமே
ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும் – நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்
ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
வதறிந்தன னுண்மையே – போலி
ஆவதறிந்தன னுண்மையே
தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் – மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் – நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்
சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் – இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் – உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்.”
அவர் பாடிமுடித்ததும் நான் “ஆகா என்ன கருத்துள்ள பாடல் சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் – இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்
என்று அவர் சொன்னாரே அது எவ்வளவுக்கு இன்றைய அரசியலுக்கு பொருத்தம்” என்றேன் நான்
“தம்பி இந்த என் தோட்த்து காவலனை பற்றி ஒரு கதை உண்டு”
“ சொல்லுங்ககோ ஐயா”
இந்த வருடம் என் தோட்டதில் வெள்ளை கத்தரி என்றும் இல்லாதவாறு காய்திருந்தது. அந்த நாட்களில் அம்மன் கோவில் பொங்கல் விழாவுக்கு கத்தரிகாய்களை ஆய்ந்து கோவில் பொங்கலுக்கு எடுத்து செல்வோம் என்று இருந்தேன். அடுத்த நாள் நான் தோட்டதுக்கு போன போது நான் எதிரபார்கவில்லை என் தோட்டத்து காவல்காரன் தன் கடமையை சரி வர செய்திருக்கிறான் என்று.”
அப்படி என்ன ஐயா அங்கை நடந்தது“?
“கத்தரிக்காய்களை இரவில் தனது டோர்ச் லைட் உதவியோடு திருட வந்த ஒருவன் இரவில் காவல்காரனுக்கு கீழ் பாம்பு தீண்டி இறந்து கிடத்தான். அவன் உடல் முழுவதும் பாம்பின் நஞ்சு கலந்து நீல நிறமாய் இருந்தது.
அது அம்மன் கொடுத்த தண்டனை. அவள் பல அதிசயங்களை ஏற்கனவே செய்தவள் தம்பி” பெரியவர் சொன்னார்.
“உண்மை தான் ஐயா’ என்று கூறி அவரிடம் இருந்து விடை பெற்றேன்.
( உண்மையும் புனைவும் கலந்தது )
– பொன் குலேந்திரன்- கனடா