பிரித்தானியாவில் தமிழர் மரபுரிமை மாதமாக தை திங்களை பிரகடனப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகின்றது. இன்று பிரித்தானியாவின் தலைநகரில் தொடக்க விழா இடம்பெறுகின்றது. விவசாயிகள் பெருமளவில் வாழ்விடமாகக்கொண்ட கிளிநொச்சி மக்களுக்கான அமைப்பு என்ற ரீதியில் கிளி பீப்பிள் அமைப்பு தமது ஆதரவினை தெரிவித்து ஊடக செய்தியினை வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.
ஊடக செய்தி: 17 தை திங்கள் 2020
தை மாதத்தினை தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்தும் முயற்சிக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு [KILI PEOPLE] ஆதரவு தெரிவிப்பு
உலகமெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் தமது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பேணிவருவது தமிழர்கள் என்ற இனத்தின் இருப்புக்கும் வாழ்தலுக்கும் பலமாக அமைவது மட்டுமன்றி பூரணத்துவமான தமது எதிர்கால சந்ததிகளின் ஒளிமயமான வாழ்க்கையை நிறுவுவதுமாகும்.
ஈழத்தமிழர்கள் தனித்துவமான பாதுகாப்பான சுயநிர்ணயத்துடனான ஒரு தேசிய இனமாக வாழ்வதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முயன்று வருவது வரலாறு ஆகும். பழமை வாய்ந்த தமிழ்மொழியை பேசும் ஒரு தேசிய இனமாக தமிழர்கள் தமது கலை கலாசாரங்களை மற்றும் மொழியை சுய நிர்ணய உரிமையைப் பாதுகாக்க நீண்ட காலம் போராடி வருவது காலத்தின் தேவையாகும். ஆயினும் ஈழத்தமிழர்கள் கடந்தகால நிகழ்வுகளால் உலகமெங்கும் புலம்பெயர்ந்து தமது இருப்பினை வெவ்வேறு நாடுகளில் அமைத்துக் கொண்டு புலம்பெயர் தமிழர்கள் எனும் அடையாளத்தை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அந்தந்த தேசங்களில் தமது அங்கீகாரத்தினை நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர்.
தமிழர்களின் புத்தாண்டு தை திங்கள் முதலாம் திகதி என்பது தமிழர்களின் பண்டைக்காலம் தொடக்கம் பின்பற்றப்பட்டு வருவதும் அன்றைய தினமே தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடுவதும் மரபு ஆகும். பிரித்தானிய தமிழர்கள் தை மாதத்தினை தமிழர் மரபுரிமை மாதமாக பிரகடனப்படுத்துவதற்கு இவ்வருடம் முனைவது எமக்கு மகிழ்வினைத் தருகின்றது.
பிரித்தானியாவில் சுமார் நான்கு இலட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். தமது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை செழுமைப்படுத்தும் மாதமாகவும் தமிழர்களின் புத்தாண்டு மாதமாகவும், பொங்கல் விழா மாதமாகவும், உழவர் தின மாதமாகவும் ஈழத்தமிழர்களின் எழுச்சியின் அடையாள மாதமாகவும் தை மாதத்தினை “தமிழர் மரபுரிமை திங்கள்” என பிரகடனப்படுத்த உள்ளனர். இந்த முயற்சிக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு [KILI PEOPLE] தமது ஆதரவினை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது. விவசாயிகள் பெருமளவில் வாழ்விடமாகக்கொண்ட கிளிநொச்சி மக்களுக்கான அமைப்பு என்ற ரீதியில் நாம் பெருமையும் கொள்கின்றோம்.
தமிழர் இருக்கும் திக்கெட்டும் தை திங்களின் சிறப்பு பரவட்டும். நாம் அழியா இனமெனும் அடையாளத்தினை அது விதைக்கட்டும். பிரித்தானிய தமிழர்கள் தை மாதமெங்கும் பல்வேறு நிகழ்வுகளை நடாத்தட்டும். அவை பிரித்தானிய அரசின் அங்கீகாரத்திற்கான கதவினைத் தட்டட்டும். இம் முயற்சியினை முன்னெடுத்துச் செல்லும் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளன அமைப்புக்கு எமது வாழ்த்துக்கள்.
நன்றி
சுப்ரம் சுரேஷ்
செயலாளர்
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு [KILI PEOPLE]