மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஓர் கிராமத்தில், அங்குள்ள பெரியவர்களின் உத்தரவின் பேரில் நடு வீதியில் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து பெண் ஒருவரை குழுவாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20 வயது இளம் பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சில கிராமப்புறங்களிலுள்ள (பஞ்சாயத்து) உத்தியோகப்பூர்வமற்ற நீதிமன்றங்களின் உத்தரவினை மீறுவோருக்கு இவ்வாறான தண்டணைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணுக்கும் அயல் கிராமத்திலுள்ள ஒரு இளைஞனுக்கும் இடையில் காதல் உறவு காணப்பட்டதாகவும், இந்த குற்றத்திற்கு தண்டனை வழங்கும் வகையில் இந்த தீர்ப்பினை கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் வழங்கியுள்ளதாவும் தகவல்கள்.
இந்த பெண்ணும் அயல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த தினமான கடந்த திங்கள் அன்று குறித்த இளைஞர் திருமணம் பற்றி பேசுவதற்காக அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், இதனை எதிர்த்த ஊர் பெரியவர்கள் குறித்த ஜோடியினை அபராதமாக தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இளம்பெண்ணின் குடும்பத்தினரால் இந்த தொகையை செலுத்த முடியவில்லை.
இதனையடுத்து பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துமாறு ஊர் பெரியவர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, அந்த கிராமத்தை சேர்ந்த 13 பேர் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆபத்தான நிலையில் அங்குள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் திங்கட்கிழமையன்று இடம்பெற்றிருந்தாலும் பெண்ணின் வீட்டார் புதன் கிழமையே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் போல்பூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 14 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி பிஜுஷ் கோஷ் உத்தரவிட்டார். மேலும் அந்த இளம்பெண்ணுடன் பழகி வந்த வாலிபரும் கைது செய்யப்பட்டார்.
இந்த பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில கவர்னர் எம்.கே.நாராயணன், இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை மத்திய தகவல் தொடர்பு மந்திரி மணீஷ் திவாரியும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை காட்டு மிராண்டித்தனமானது என வர்ணித்துள்ள அவர், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, ‘இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவிடப்படும்’ என மேற்கு வங்க மகளிர் ஆணைய தலைவர் சுனந்தா கோஸ்வாமி கூறியுள்ளார்.