கிளி மக்கள் அமைப்புக்கும் பிரித்தானியாவில் உள்ள கிளிநொச்சி பிரதேச பழைய மாணவர் சங்கங்களுக்கும் இடையே நேற்று [08/03/2020] ஒரு கலந்துரையாடல் இலண்டனில் நடைபெற்றது. இதில் கிளி பீப்பிள் மற்றும் கிளி மத்திய கல்லூரி, கிளி இந்துக்கல்லூரி, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, பரந்தன் இந்து மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மேற்கு அ த க பாடசாலை, உருத்திரபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கிளி பீப்பிள் அமைப்பினால் எதிர்வரும் ஜூலை 5ம் திகதி இலண்டனில் நடைபெறப் போகும் நிதிசேகரிக்கும் நடைப்பயணம் தொடர்பாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பழைய மாணவர் சங்கங்கள் கலந்துகொண்டு தமது அமைப்பு சார்ந்து நிதி சேகரிக்க உள்ளனர். ஒவ்வொரு பழைய மாணவர் சங்கங்களினாலும் சேகரிக்கப்படும் நிதி அவர்களுடைய திட்டங்களுக்கு வழங்கப்படுமென கிளி பீப்பிள் முன்மொழிந்த ஆலோசனையை ஏற்று அனைவரும் ஒன்றிணைந்ததாக இந்த நிதி சேகரிக்கும் நடைப்பயணம் நடைபெற உள்ளதாக கிளி மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சேகரிக்கப்படும் நிதி கிளிநொச்சி பிரதேச கல்வி வளர்ச்சிக்கு பயன்பட உள்ளது. கிளிநொச்சி மாவட்டம் கல்வி வளர்ச்சியில் சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் பிற நாடுகளில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்கள் தமது பாடசாலைகளின் வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி பாடசாலை பழைய மாணவர் சங்கங்களுக்கு நிதி சேகரிக்க சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர்.