கலால் வரி உயர்த்தப்பட்டது தொடர்பாக நிதியமைச்சர்தான் பொதுமக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
காட்டுத் தீ போன்று உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் கிருமியால் மக்களின் உயிர்கள் மட்டுமில்லாது, உலக நாடுகளின் பொருளாதாரமும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதாரம் 2008ம் ஆண்டு, சரிவைச் சந்தித்த போது கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து காணப்பட்டது. அதற்கு இணையான விலை சரிவு தற்போது நிகழ்ந்து வருகிறது.
கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்பவே பெட்ரோல், டீசலின் விலையும் மாறுபட்டு வந்தது. தற்போது கச்சா எண்ணெய்யின் விலை சரிவை சந்தித்து வந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் மீதான விலையேற்றம் குறைந்தபாடில்லை.
உச்சபட்சமாக பெட்ரோல், டீசல் பொருட்களின் மீது மத்திய மோடி அரசு விதித்திருக்கும் கலால் வரியே விலை குறைவாகாமல் போனதற்கான காரணம்.
கச்சா எண்ணெய்யின் விலை குறைவை கலால் வரியை உயர்த்துவதன் மூலம் சமன் செய்து வருகிறது மத்திய அரசு. இதனால் பாதிக்கப்படுவது என்னவோ பாமர மக்களே. அதன்படி, பெட்ரோல் டீசல் முறையே ரூ.8 மற்றும் ரூ.4 வரை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சாலை வரிக்கு பெட்ரோலுக்கு ரூ.1ம் , டீசலுக்கு ரூ.10ம் உயர்த்தப்பட்டுள்ளது.
மோடி அரசு கலால் வரியை உயர்த்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருட்கள் மீதான கலால் வரியை 35-40% குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொருளாதார நிபுணரும், பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி மோடி அரசு கலால் வரி உயர்வு குறித்து விமர்சனம் செய்துள்ளார்.