நேர்கண்டவர்: ஜேசு ஞானராஜ்
அகில இந்திய காது கேளாதோர் கலை மற்றும் கலாச்சார சங்கம், வீலிங்க் ஹாப்பினெஸ் பவுண்டேஷனுடன் இணைந்து டெல்லியில், அகில இந்திய அளவில் காது கேளாதோருக்கான ‘மிஸ் மற்றும் மிஸ்டர் இந்தியா 2020’ பட்டத்திற்கான போட்டியை நடத்தியது. இதில் தமிழகத்தின் நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம், பத்திநாதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் ராஜதுரை (24) “மிஸ்டர் டெஃப் இந்தியா இன்டர்நேஷனல்” பட்டத்தை வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். டெல்லி எம்.பியான மீனாட்சி லேகி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் 65 பேர் கலந்து கொண்டனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆர்த்தி ஷர்மா ‘மிஸ் டெஃப் இந்தியா இன்டர்நேஷனல்’ பரிசை வென்றார்.
பட்டம் வென்று ஊருக்குத் திரும்பிய ரமேஷின் கிராமத்துக்கே சென்று பேட்டி கண்டோம். அவரின் உறவினர் தங்க செல்வ குமார் உடனிருக்க, சந்தோஷமாய் நம்மை வரவேற்றனர் இருவரும். நம் கேள்விகளை சைகை மொழிமூலம் தங்க செல்வ குமார் விளக்க, உற்சாகமாய் சைகை மொழியில் பதிலளித்தார் ரமேஷ். சிறுவயது முதலே நாகர்கோவிலில் உள்ள “ORAL SCHOOL FOR THE HEARING IMPARED(OSHI)” பள்ளியில் படித்ததால் அவர் கூறும் ஒரு சில வார்த்தைகளை நம்மாலும் புரிந்துகொள்ள முடிகிறது. இவர், 2017 ம் வருடம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் மூன்றாம் பரிசு வென்றவர் என்பது கூடுதல் தகவல்.
மிஸ்டர் டெஃப் பட்டம் வென்றதற்கு வாழ்த்துக்கள். எப்படி இருக்கிறது இந்த சந்தோஷம்?
ரொம்ப மகிழ்ச்சி! அப்பா ராஜதுரை, அம்மா ஜெகதீஸ்வரி இவங்க ரெண்டு பேருக்கும் தான் முதல்ல நன்றி சொல்லணும். அப்புறம் என் அண்ணன் ராஜேஸ், அக்காமார் சுகன்யா & சோனியா. வீட்ல நாங்க எல்லாரும் சேர்ந்து இருந்தாலே திருவிழா தான். எங்க வீட்டு மாடும் எங்க கூட சேர்ந்து விளையாடும். நான் பிறந்த ஒரு வருஷத்திலே எனக்கு காது கேட்காதுங்கற விஷயம் அம்மாவுக்கு தெரிஞ்சது. அப்போ எவ்வளவு வேதனை பட்டிருப்பாங்க. வளர வளர சூழ்நிலைகள் என்னை ஏளனம் செய்யும் போதெல்லாம் இவர்கள் மத்தியில் ஜெயித்துக் காட்டவேண்டும் என்ற எண்ணம் தீயாக என்னுள் கொழுந்து விட்டு எரிந்தது. விவசாய குடும்பமாக இருந்தாலும் படிப்பு தான் அழியாத செல்வம் னு அப்பா எப்போதும் சொல்வார். அதனால் மிகவும் கஷ்டப்பட்டு எங்களை படிக்கவைத்தார். நாகர்கோவிலில் உள்ள OSHI பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, அதன் பின் கோயம்புத்தூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன்.
அப்படியானால், தமிழ் ஆங்கிலம் எழுத, வாசிக்கத் தெரியுமா?
ஆமாம் என்றவர், நமக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் “தங்கள் வருகைக்கு நன்றி” என்று எழுதிக் காட்டுகிறார். அடுத்தநாள் மெசஞ்சரில் நாம் சில விபரங்களை எழுதிக் கேட்க, பதிலை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்தார்.
படித்து முடித்தவுடன் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?
படித்து முடித்ததும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. நன்றாக வாய் பேச முடிகிற, காது கேட்கும் திறன் உள்ளவர்களே வேலை தேடி திணறிக்கொண்டிருக்கையில் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தினம் தினம் என்னையே நான் நொந்து கொள்வேன். ஆனால், அப்பா படும் கஷ்டத்தைப் பார்த்து ஏதாவது செய்து அப்பாவுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் மட்டும் என்னை உந்தித் தள்ளிக் கொண்டே இருந்தது. நம் முன்னாள் குடியரசுத்தலைவர் APJ அப்துல் கலாம் அவர்களின்,
“கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே!
அது உன்னை கொன்று விடும்.
கண்ணை திறந்து பார்
நீ அதை வென்றுவிடலாம் “
என்ற வார்த்தைகளும் “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற வார்த்தைகளும் தான் நான் சோர்ந்திருக்கும் போது என்னை ஊக்குவிக்கும் வார்த்தைகள். அதுமட்டுமல்ல விவேகானந்தரின் “நீ எதை நினைக்கிறாயோ, அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்” என்ற வரிகள் தினமும் நான் உச்சரிக்கும் வார்த்தைகள்.
தன் மொபைலில், மேற்கண்ட வரிகளையும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 99 செ.மீ உயரம் கொண்ட மாற்றுத் திறனாளியான நிக் வுஜிசிக்கின் ஊக்கமூட்டும் வரிகளையும் ‘ஸ்கிரீன் சேவரா’க வைத்திருப்பதை நம்மிடம் காட்டுகிறார்.
மாடலிங் துறையில் நுழைந்தது எப்படி?
வடக்கன்குளத்தை சேர்ந்த என்னுடைய பள்ளித் தோழி உத்ரா அக்கா, கைலாஷ் ஸ்டுடியோ ஆரம்பித்திருந்தார். நான் அங்கு செல்லும் போதெல்லாம் என்னை விதவிதமாக புகைப்படம் எடுத்தார். அதுதான் எனக்குள் மாடலிங் ஆசையை விதைத்தது. கூடவே, படிக்கும் போது இருந்த சினிமா மோகமும் என்னை சென்னைக்கு இழுத்தது. அதனால் படிப்பு முடிந்ததும் சென்னை சென்றேன். பல கம்பனிகள் ஏறி இறங்கினேன். கேலி கிண்டல்கள் தான் பதிலாகக் கிடைத்தன. அப்போதெல்லாம் சென்னையில் இருந்த என் கல்லூரிகால நண்பர்கள் தான் “நீ கண்டிப்பாக ஜெயிப்பாய்” என்று எனக்கு தைரியம் தந்தனர். சினிமாவில் நடிக்க நான் கொடுத்த என் பயோடேட்டா, ஒரு கம்பெனியிலிருந்து பேஷன் கோ-ஆடினேட்டர் திரு.சுனில் மேனன் அவர்களின் கைகளில் கிடைத்திருக்கிறது. என்னைத் தொடர்பு கொண்டார். உடனே ஒத்துக்கொண்டேன். அதன் பின் அவரின் பேஷன் ஷோக்களில் ‘ராம்ப் வாக்’ நிறைய செய்தேன். ஆனாலும் சினிமா ஆசை என்னை விடவில்லை. அதன் பலனாக கதிர் நடித்த “ஜடா” திரைப்படத்தில் என்னைப் போன்ற காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு காரெக்டருக்கு என் குரல் நடித்திருக்கிறது.
மிஸ்டர் டெஃப் இந்தியா போட்டியில் கலந்துகொண்டதைப்பற்றி சொல்லுங்களேன்?
சென்னையில் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது, உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் ஊருக்கு வந்துவிட்டேன். அப்போது தான் மிஸ்டர் டெஃப் போட்டி பற்றி பேப்பரில் பார்த்தேன். அதன் விபரங்களை இணையத்தில் தேடினேன். அப்ளிகேஷனும் போட்டேன். வீட்டில் யாருக்குமே இது தெரியாது. போட்டிக்கு நான் தேர்வாகி இருப்பதாகவும் உடனே டெல்லி வரும்படியும் தகவல் வந்தது. வீட்டில் சொன்னால், உடல் நிலை சரியில்லாத இந்த நேரத்தில் அவ்வளவு தூரம் விடமாட்டார்கள் என்பதால் சென்னையிலிருக்கும் நண்பரைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு டெல்லி சென்றேன்.
போட்டிக்கு, என்னைப் போன்ற 65 பேர் வந்திருந்தனர். டெல்லி எம்.பியான மீனாட்சி லேகி அவர்களின் முன்னிலையில், அகில இந்திய காது கேளாதோர் கலை மற்றும் கலாச்சார சங்கத்தின் பிரசிடென்ட் திரு. ராஜ்குமார் பஞ்சாபி, NDMC சேர்மன் தர்மேந்திரா I.A.S மற்றும் மிஸ். அருஷி நிஷாங்க் போக்ரியால் ஆகியோர் வழிநடத்த, போட்டி ஆரம்பமானது. எத்னிக், பேஷன், திறமை மற்றும் கேள்வி&பதில் என நான்கு நிலைகளில் போட்டி நடத்தப்பட்டது. ஏற்கெனவே, பேஷன் துறையில் இருந்த அனுபவம் முதல் இரண்டு ரவுண்டுகளில் நான் ஜெயிக்க துணை நின்றது. அடுத்தடுத்த சுற்றுகளில் திறமைக்கும் புத்தி கூர்மைக்கும் தான் வேலை என்பதை அறிந்திருந்ததால் தைரியமாய் கேள்வியை எதிர்கொண்டேன். நம் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் மேடையில் தோன்றினேன். ஒரு நிமிடம் விவேகானந்தர், அப்துல்கலாம் மற்றும் நிக் வுஜிசிக் ஆகியோர் என் மனக்கண் முன் வந்தனர். “வாழும் கலைஞர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும், ஏன்?” என்ற கேள்விக்கு அமீர்கான் என்ற பதில் தான் எனக்கு முதல் பரிசைப் பெற்றுத் தந்தது. எனக்கு பரிசு கிடைத்ததில் நம் பாரம்பரிய உடைக்கும் பங்கு உண்டு என்பதில் எனக்கும் பெருமை தான்.
செப்டெம்பர் மாதம் உலக அளவில் இந்த மிஸ்டர் டெஃப் போட்டி வெளிநாட்டில் நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற்க இருக்கிறேன். மீண்டும் மீண்டும், வயதான அப்பாவை பணத்துக்காக கஷ்டப்படுத்த விரும்பவில்லை. யாரவது ஸ்பான்சர் செய்தால் அது எனக்கு பக்க பலமாக இருக்கும். என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு விளம்பர தாரர்கள் ஸ்பான்சர் செய்தால் அது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
வாழ்க்கையில் ஜெயித்து விட்டதாக நினைக்கிறீர்களா?
சாதிக்கப் பிறந்தவர்கள் நாங்கள். இப்போது தான் எழுந்து ஓட ஆரம்பித்திருக்கிறேன், இன்னும் சாதிக்கவேண்டியது நிறைய இருக்கிறது.மாற்றுத் திறனாளியால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் எல்லாம் சாத்தியமே.
உற்சாகத்துடன் பதில் தந்தார்.அவரின் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் கூறி விடைபெறோம்.
(இவரை வாழ்த்த நினைப்பவர்கள் ramesh.mech100@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.)
-ஜேசு ஞானராஜ். கட்டுரையாளர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வாழ்கிறார். கட்டுரைகள், நேர்காணல்கள், விபரணப் பத்திகள் என எழுதி வருகிறார்.