நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்பட்டுவரும் நிலையில் அன்றாடம் கூலித்தொழில் மற்றும் சுயதொழில் செய்து தமது வாழ்வை முன்னெடுத்துவரும் குடும்பங்களும், உழைப்பாளர்கள் இன்றி தனித்து வாழும் குடும்பங்களும், தனியாக முதியோர்களைக் கொண்ட குடும்பங்களும் தமது அன்றாட உணவுத்தேவையினை நிறைவு செய்வதில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 1200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
லண்டனில் தலைமையிடமாக இயங்கிவரும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு (KILI PEOPLE) ஏனைய நாடுகளில் உள்ள உறுப்பினர்களையும் இணைத்து பிரித்தானியாவில் இயங்கிவரும் கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்களுடனும் ஏனைய தொண்டு அமைப்புக்கள் மற்றும் உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து
“Covid 19 Crisis Appeal For Kilinochchi.” எனும் செயல் திட்டத்தின் ஊடாக தலா ரூபா 1285/- பெறுமதியான (5கிலோ அரிசி, 5கிலோ கோதுமைமா, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சீனி, 100 கிராம் தேயிலை)1200 நிவாரணப் பொதிகளை கடந்த 7ம் திகதியில் இருந்து 10ம் திகதி வரை கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச பிரிவுகளான கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பளை பிரதேச மக்களுக்கு வழங்கியது.
இச் செயற்றிட்டத்தினை கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி அமையம் (KEDEF) , கிளிநொச்சி மாவட்டக் கல்வி அறக்கட்டளை (KDET), கிளிநகர் சித்திவிநாயகர் ஆலயத்தினர், பரந்தன் இளைஞர் வட்டம், கிளி நகர ரோட்டரி கழகம் ஆகியோர் இணைந்து கிளிநொச்சியில் முன்னெடுத்து வருகின்றன. இதன்படி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 450 பொதிகளை கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி அமையம் (KEDEF), கிளிநகர் சித்திவிநாயகர் ஆலயத்தினர் இணைந்து கடந்த 7ம் 8ம் திகதிகளில்வழங்கியதுடன் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 300 பொதிகளை பரந்தன் இளைஞர் வட்டத்தினர் கடந்த 8ம் 9ம் திகதிகளில் வழங்கினர்.
பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 250 பொதிகளை கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி அமையத்தினர் (KEDEF) கடந்த 8ம்திகதி மற்றும் 10ம் திகதியும் வழங்கினர். அதேபோன்று பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 200 பொதிகளை கிளிநொச்சி மாவட்ட கல்வி அறக்கட்டளையினர் (KDET) கிளி நகர ரோட்டரி கழகதுடன் இணைந்து கடந்த 10ம்திகதி வழங்கினர். இச்செயல் திட்டமானது அந்தந்தப் பிரதேச செயலகத்தின் வழிகாட்டுதலில் கிராம அலுவலர்களது ஒத்துழைப்புடன் வீடு வீடாகச் சென்று முன்னெடுக்கப்பட்டது.
வணக்கம் இலண்டனுக்காக கிளிநொச்சியிலிருந்து அரசு