பட்டதாரி பயிலுனராக நியமனம் பெற்றவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் நியமனம் வழங்க முடியாது என தெரிந்தும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது.
அரசாங்கத்துக்கு பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட முன்னர் நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது நியமனம் வழங்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதன்பின் இவர்களின் பயிற்சி தேர்தல் ஆணையாளரால் இடைநிறுத்தப்பட்ட போது பட்டதாரிகளை வீட்டில் வைத்தே அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவோம் என பிரதமர் கூறினார். அதேபோல் அவர்களுக்கான மார்ச் மாத கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி கூறினார். ஆனால் எதுவித கொடுப்பனவும் அந்த மாதம் வழங்கப்படவில்லை.
அதன்பின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பட்டதாரிகளை இணைத்துகொள்வதாக கூறினர். அதன்பின் தேர்தல் ஆணையாளர் அவ்வாறு அவர்களை பணியில் அமர்த்த முடியாது என கூறியதாக கூறி அதையும் நிறுத்தினர்.
அதன்பின் கடந்த வாரமளவில் பட்டதாரிகளுக்கு இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறி அதையும் தேர்தல் ஆணையாளர் இடைநிறுத்தியுள்ளதால் வழங்க முடியாது என இப்போது கூறுகின்றனர்.
இவ்வாறு பயிற்சி வழங்குகிறோம், கொடுப்பனவு வழங்குகிறோம் என அரசாங்கம் கூறுவதும் பின் தேர்தல் ஆணையாளர் அதை இடைநிறுத்துவதுமாக மாறி மாறி நடப்பதில் பாதிக்கப்படுவது பட்டதாரிகளே.
அரசாங்கத்தினால் வழங்கும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும்போது அதை இடைநிறுத்தாத தேர்தல் ஆணையாளர் பட்டதாரிகள் விடயத்தில் மட்டும் இவ்வாறு நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு பட்டதாரிகளாக நியமனம் பெற்ற பலர் இந்த வேலையை நம்பி தாம் முன்னர் செய்த வேலைகளை விட்டவர்கள். செய்த வேலையும் இல்லாமல் இந்த வேலையும் இல்லாமல் இந்த சமயத்தில் வருமானத்துக்கு பல சிரமங்களை எதிர்கொள்வதாக பட்டதாரிள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே பயிற்ச்சி தருகிறோம் கொடுப்பனவு தருகிறோம் என்று நாளுக்கு நாள் பட்டதாரிகளை ஏமாற்றாமல் தேர்தல் ஆணையாளருடன் கலந்து பேசி பட்டதாரிகளுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுகொடுக்குமாறு அரசாங்கத்திடம் பட்டதாரிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இதற்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.