குடாநாட்டின் சமூக நலன்சார்ந்த இரணைமடு குடிநீர்த்திட்டத்தினூடாக சிங்களக் குடியேற்றம் என்ற வகையிலான எந்தவொரு உள்நோக்கமும் அரசாங்கத்திடம் கிடையாது. வீரகேசரி பத்திரிகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்.பி. முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் நீர் வழங்கல் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்க்ஷ தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி எழுந்த அமைச்சர் தினேஷ் குணவர்தன வீரகேசரி பத்திரிகையின் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதிய வெளியீட்டில் வெளியாகியிருந்த இரணைமடு குடிநீர்த்திட்டம் தொடர்பான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. எஸ். ஸ்ரீதரனின் செய்தி தொடர்பில் அமைச்சின் விளக்கத்தை முன்வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.