பரந்தன் காஞ்சிபுரம், உமையாள்புரம், விலாவோடை பகுதிகளில் இன்று காலை 7 மணிமுதல் சுமார் 10,000 பனம் விதைகளும் 100 தென்னம்கன்றுகளும் நடப்பட்டன.
பரந்தன் மகாவித்தியாலய பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம் மற்றும் பரந்தன் இளைஞர் வட்டம் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பரந்தன் பிரதேச உள்ளூர் பொது அமைப்புக்கள், கமக்காற அமைப்புக்கள் பொதுமக்கள், மாணவர்கள் என பெருமளவான ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர். கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மரங்கள் நடவேண்டியதன் நோக்கம் பற்றியும் பனம் மரத்தின் முக்கியத்துவம் பற்றியும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பும் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகளை தாயக நிலங்களில் நடும் கற்பகா திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக இன்று மேற்படி அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுத்திருந்தன.
ஏற்கனவே வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேசங்களின் நீட்சியாக அமைந்துள்ள இரணைமடுகுள விரிவாக்க புதிய அணைக்கட்டின் கரைகளில் கடந்தவாரம் பத்தாயிரம் பனம் விதைகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.