கெளதம் ரோட்டோரமாய் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் கையில் கூடைப் பந்து வைத்து விளையாடிக் கொண்டே நடந்ததால் எதிரில் வந்து கொண்டிருந்த பெண்ணை கவனிக்காமல் இடித்து விட்டான். சட்டென நிலை தடுமாறி கீழே விழ இருந்தவளை இடையில் கை கொடுத்து தாங்கிப் பிடித்துக் கொண்டான். அப்போது இவன் நெற்றியும் , இவள் நெற்றியும் இடித்துக் கொண்டது. இருவர் கண்களும் ஒருசேர மோதி காதல் கானம் மீட்டத் தொடங்கியது.
“செம பிகர்” என்று அவன் மனதில் சொல்லிக் கொள்கிறான்.
“ரொம்ப Handsome ஆ இருக்கானே ” என்று நிலாவும் மனதில் நினைத்துக் கொள்கிறாள்.
ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அடுத்த ஒரு வாரமும் இருவரும் அந்த வழியில் போய்க் கொண்டு தான் இருந்தனர். ஆனால் பேசிக் கொள்ளவில்லை. சிரித்துக் கொண்டார்கள்.
‘எப்படியாவது இவளிடம் பேசி விட வேண்டும்’ என அவன் மனதில் நினைத்துக் கொள்வான். ‘இவன நம்ம வலைல எப்படியாவது விழ வைக்கணும்’ என அவளும் நினைத்துக் கொள்வாள். ஆனால் எல்லாம் மனதோடு சரி. இதுவரை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
அடுத்த நாள் எப்படியும் பேசி விட வேண்டும் என இருவரும் நினைத்துக் கொண்டனர். மறுநாளும் அதைப்போல நடந்து வரும்போது ஒருசேர “ஹாய்” என்றனர். ஆகா. What a coincidence என்று நினைத்துக் கொண்டனர். பின்னர் இருவரும் பேசிப் பேசி நெருக்கம் ஆகினர்.
பார்க் பெஞ்சில் அமர்ந்து பேசுவதும், கடற்கரையில் அமர்ந்து பேசுவதும், பேருந்தில் ஒன்றாய்ப் பயணிப்பதும் எனத் தொடங்கினர்..
ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும் போது அவள் கையைப் ஏதேச்சையாக பிடித்து விட்டான். அவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அன்று முதல் அவளுக்கு அவன் தன் கையைப் பிடித்தது தான் ஞாபகத்திற்கு வந்து தொல்லை செய்து அவனை நினைக்கச் செய்தது. அதை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
பேருந்தில் போகும் போது அவன் தோள்களில் தூங்குவதும், அவன் பாஸ்கெட் பால் விளையாடும் போது அவன் விளையாடுவதை ரசித்துப் பார்ப்பதுமாக போய்க் கொண்டிருந்தது அந்த காதல் பயணம்.
ஒரு நாள் அவன் பாஸ்கட் பால் விளையாடும் போது பின்னந்தலையில் வந்து பந்து பட்டது. அப்போது அதை அவன் சாதாரணமாக எடுத்துக் கொண்டான்.
ஆனால் அடுத்த நாள் அவனுக்கு தாங்க முடியாத தலை வலி இருந்தது. ஆனால் இதை அவன் அவளிடம் மறைத்து விட்டான். அது தீவிரமாக மாறி விடும் என பயந்து போய் மருத்துவமனைக்கு போய்க் காட்டலாம் என முடிவெடுத்து போய் செக் செய்து கொண்டான்.
மறுநாள் வந்து ரிபோர்ட் வாங்க சொல்லி டோக்கென் நம்பர் 6 என்று சொல்லி அனுப்பினார்கள்.
அவனும் மறுநாள் வந்து டோக்கன் நம்பர் சொல்லி கேட்டான்.அவர்கள் அவன் ரிப்போர்ட்ஐ கையில் கொடுத்து, உங்க டோக்கென் நம்பர் கூப்பிடுறப்போ உள்ள போங்க என்று சொனார்கள்.
அவனை உட்கார வைத்தனர்.
அவன் டோக்கென் வந்ததும் டாக்டர் ஐ சந்தித்தான்.
டாக்டர், ” சாரி , இது குணப்படுத்த முடியாது மெடுலா oblangata பக்கம் அடி பலமா பட்டிருக்கு, சரி பண்ணுறது ரொம்ப கஷ்டம் என்று சொல்லிவிட்டார்.
அவனுக்கு அது பெரிய கஷ்டமாக தெரியவில்லை. ஆனால் நிலாவை நினைக்கும் போது தான் மனதில் கஷ்டம் குடிகொண்டது. அன்றிலிருந்து அவளை சந்திக்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டான்.
அவளோ அவள் வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு ஓகே சொல்லி விட்டார்கள் என சொல்ல இவனை தேடிக் கொண்டிருந்தாள்.. அவனும் ரோட்டில் நடந்து வரும் போது எதேச்சையாக இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
“எங்க போயிருந்த … உன்ன எவளோ நேரமா தேடுறேன் தெரியுமா, என்ன ஆச்சு ஒரு மாதிரியா இருக்க”
“நாம பிரிஞ்சிடலாம்”
” , இப்போ தான் என் வீட்ல மேரேஜ் ஒத்துகிடாங்கனு சொல்ல வந்தேன் , செத்துப்போனு சொல்லு செத்துடுறேன், ஆனா பிரிஞ்சுடலானு மட்டும் சொல்லாத” என்று அவனை ஓடிப் போய் இருக்கும் இடம் மறந்து இருக்கமாய் கட்டிப் பிடித்து கதறி விட்டாள்.
அவனும் முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் அவள் கையைப் பிடித்து பிரித்து, “போயிடு இங்க இருந்து” என்று திட்டி விட்டான். அவளும் அழுதுகொண்டே ஓடி விட்டாள்.
அவன் அவள் போனதும் அங்கேயே உட்கார்ந்து அவளை சந்தித்த நாட்கள் முதல் நடந்தவைகளை நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தான்.
‘ஏன் நான் அவளை சந்திக்க வேண்டும், அவளுக்கு ஏன் இவ்வளவு பெரிய வலியை நான் கொடுத்திருக்க வேண்டும், அவள் கையைப் பிடித்து அவள் இதயத்தில் ஊடுருவிவிட்டு இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டேனே , எப்படி துடித்துப் போயிருப்பாள். அவளுக்காக வாழ வேண்டும் என நினைத்தேனே , இப்போது உள்ள நிலைமை… ஐயோ ..’ என நினைத்து அழுது அழுது அவன் கண்களுக்கு கண்ணீர் பஞ்சமே வந்து விட்டது.
திடீரென்று ஒரு உள்ளுணர்வு ஒருவேளை அவர் தற்கொலை எதுவும் செய்து விடுவாளோ என்று நினைத்து அவள் ஓடிப்போன திசையில் இவனும் ஓடினான். ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடியிருப்பான். அதோ ரோட்டின் அடுத்த பக்கம் அழுது கொண்டே போவது அவள் தானே என நினைத்துக் கொண்டு, வண்டி வருகிறதா எனப் பார்க்காமல் ஓட, வேகமாக வந்து கொண்டிருந்த லாரி அவன் மேல் இடிக்க “நிலா ஆஆஆஆஆ” என்று கத்திக் கொண்டே தன் கடைசி மூச்சை விட்டான். அதற்குள் அவளும் வந்து அவன் தலையைத் தூக்கி மடியில் வைத்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டு, பார்ப்போர் கண்களையும் ஈரமாக்கிக் கொண்டிருந்தாள்.
அதே சமயம் மருத்துவமனையில்,
“நர்ஸ் அந்த 9 நம்பர் பேஷேன்ட் ரிப்போர்ட் மாத்தி குடுத்துருகீங்க போல”
அவளும் ரிப்போர்ட் எல்லாம் செக் செய்து பார்த்து “ஐயோ.. சாரி டாக்டர் .. 6 நம்பர் பேஷேண்டுக்கு மாத்தி குடுத்துட்டேன் போல இருக்கு. மன்னிச்சுடுங்க “
“சே… பொறுப்புன்னு ஒன்னு இருந்தா தானே , கவனமா இருக்க மாடீங்களா யாருமே , சரி புது ரிப்போர்ட் பிரிப்பேர் பண்ணி எடுத்துட்டு வாங்க சீக்கிரம்”
நன்றி : பிரவின் ஜாக் | எழுத்து இணையம்