நாம் எவ்வளவோ விதவிதமான வடைகளை செய்து சாப்பிட்டு பார்த்திருப்போம். அதில் வித்தியாசமான முறையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை வைத்து செய்யக் கூடிய சூப்பரான வடையை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த வடையை செய்ய அதிகமாக எந்த பொருட்களும் தேவைப்படாது. சட்டுனு அஞ்சு நிமிஷத்துல வடை சுட்டு ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி செஞ்சிடலாம். உருளைக் கிழங்கு வெங்காய வடையை எப்படி செய்வது? என்பதை இனி இப்பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.
உருளைக் கிழங்கு வெங்காய வடை செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு – 2,
வெங்காயம் – 1 பெரியது,
கடலை மாவு- 2 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1, மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
கரம் மசாலா – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது,
உப்பு – தேவையான அளவிற்கு.
உருளைக் கிழங்கு வெங்காய வடை செய்முறை விளக்கம்:
உருளைக் கிழங்கை முதலில் தோல் நீக்கி துருவலில் துருவி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நீளமாக மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நறுக்கிய உருளைக் கிழங்கை பிழிந்தால், அதிலிருந்து நிறைய சாறு வரும். உருளைக் கிழங்கில் இருக்கும் சாற்றை நீக்கி உலர்வாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நறுக்கிய வெங்காயத்தில் உப்பு சேர்த்து கலந்து விட்டால் நீர் விடும். இந்த நீரே வடைக்கு போதுமானது. இதற்கென தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை. உருளைக் கிழங்குடன் வெங்காயம் சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் இதனுடன் மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் பெருங்காயத் தூள் சிட்டிகை அளவு சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் கடலைமாவு சேர்த்து வடை பதத்திற்கு பிசிறி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடுங்கள். எண்ணெய் கொதித்ததும் தயார் செய்து வைத்திருக்கும் கலவையை வடை போல் கைகளை தட்டி எண்ணெயில் போட்டு சுட சுட எடுத்து விடுங்கள். ஆரோக்கியமான வெங்காய உருளைக்கிழங்கு வடை ஐந்தே நிமிடத்தில் சுடச்சுட தயாராகி விடும். இதனுடைய சுவையும் அட்டகாசமாக இருக்கும்.
எப்பொழுதும் உளுந்த வடை, மசால் வடை என்று ஒரே விதமான வடையை செய்து அழுத்து போனவர்கள் இது போல் புதுமையான முறையில் வடையை செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதற்கும் மிக மிக சுலபமாக இருக்கும். இந்த மழை நேரத்தில் மாலை வேளையில் சூடான டீயுடன் இந்த வடையை சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
இந்த வடையை செய்யும் பொழுது குறிப்பாக தண்ணீர் சேர்க்கக் கூடாது. வெங்காயத்தில் இருக்கும் தண்ணீரே வடைக்கு போதுமானது. இதனால் எண்ணெயும் அதிகமாக செலவு ஆகாது. அதிக சுவையுள்ள உருளைக்கிழங்கு வெங்காய வடையை செய்வதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது என்பதால் அடிக்கடி செய்து உண்டு நீங்களும் மகிழலாம்.
நன்றி : தெய்வீகம் இணையம்