தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாகக் குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு வைத்தியசாலையில் முதியோர் பாதுகாப்பு நலன் மற்றும் முதியோர்கள் பராமரிப்பாளர்களுக்கான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு கையேட்டை வெளியிட்டார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட அவர், “ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 27 ஆயிரம் பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 4 இலட்சத்து 87 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனையில் செய்யப்படும் சேவையை பொதுமக்கள் புருவத்தை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு வைத்தியர்கள் செயலாற்றி வருகின்றனர்.
ஐ.ஐ.டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் நேரடியாக ஆய்வு செய்தார். இதுவரை 30 ஆயிரம் பேரை பரிசோதித்து, 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளோம். அதில் 210 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதார விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் அந்த கல்லுரி மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 97 கல்லூரிகள் 167 விடுதிகளில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
ஒட்டு மொத்த தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது. பரவலை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.