வேளாண் சட்டங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், விவசாயிகள் குறித்த கடிதத்தை நிராகரித்துள்ளனர்.
சட்டங்கள் தொடர்பாக உறுதியான தீர்வை அளித்தால் மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 3 வாரங்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அச்சட்டங்களை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அதை ஏற்க மறுத்து வருகிறது.
இந்நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்கங்கள் முன்வர வேண்டுமென்று கோரி மத்திய அரசு கடந்த கடிதம் எழுதியிருந்தது.
குறித்த கடிதத்தை நிராகரித்துள்ள விவசாயிகள், அது தொடர்பில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் புதிதாக எதுவுமில்லை. ஏற்கனவே அளித்த பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான புதிய திகதியை தெரிவிக்குமாறு மத்திய அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அந்தப் பரிந்துரைகளை விவசாய சங்கங்கள் ஏற்கெனவே நிராகரித்துள்ளன. வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே விவசாய சங்கங்களின் கோரிக்கை.
இது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். ஆனால், விவசாயிகளுக்கு உறுதியான தீர்வை மத்திய அரசு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.