ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயற்படுத்த தயாராகவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவிக்கையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பிரதமரின் திட்டத்தை, தேர்தல் ஆணையம் ஏற்கிறது. தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும், தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.
கொரோனா பரவலால், தேர்தல் பணிகள் பாதிக்க கூடாது என்பதில், தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. அதனால் தான், கொரோனா தடுப்பு நடவடிக்கைளுடன், பீஹார் சட்டசபை மற்றும் பல்வேறு மாநிலங்களில், 59 தொகுதிகளில் இடைத்தேர்தல்களை, தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தியது.
அடுத்த கட்டமாக, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை, தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. தேர்தல் திகதிகள் குறித்து, சம்பந்தப்பட்ட மாநில கல்வித்துறை அதிகாரிகளுடன், தேர்தல் அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
பாடசாலை தேர்வுகளை பொறுத்து, தேர்தல் திகதிகள் முடிவு செய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கையில்,’ அடிக்கடி தேர்தல்கள் நடப்பதால், நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கின்றன. இதனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமுல்படுத்த, மத்திய அரசு விரும்புகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.