ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காரொன்றில் பொறுத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் நான்கு மருத்துவர்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் சிறையில் நூற்றுக்கணக்கான தலிபான் கைதிகளுடன் பணிபுரிந்த நான்கு மருத்துவர்களே இன்று இடம்பெற்ற மேற்படி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.
காபூலின் கிழக்கு புறநகரில் அமைந்துள்ள புல்-இ-சர்கி சிறைக்கு மருத்துவர்கள் சென்று கொண்டிந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிய பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு காரணமாக மேலும் இருவர் காயமடைந்தும் உள்ளனர்.
தலிபான்கள் மற்றும் ஆப்கானிய அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட போதிலும், அண்மைய மாதங்களில் கபூல் நகரம் பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்து வருகின்றது.
பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளவது அண்மைய காலங்களில் காபூல் உள்ளிட்ட ஆப்கானிய பிற பகுதிகளிலும் சாதாரணமாகிவிட்டது.
காபூலில் அண்மையில் நடந்த சில தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அரசு குழு பொறுப்பேற்றுள்ளது, இதில் பல பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இரு நாட்களுக்கு முன்னர் காபூலில் ஒரு சட்டன்ற உறுப்பினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
குண்டுவெடிப்பில் சட்டமன்ற உறுப்பினர் கான் மொஹமட் வர்தக் காயமடைந்தார்.
அந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், காபூல் மாகாணத்தின் துணை ஆளுநர் மஹபொபுல்லா மொஹேபி இதேபோன்ற தாக்குதலில் கொல்லப்பட்டார்.
திங்களன்று, கிழக்கு நகரமான காஸ்னியில் ஒரு ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.