கனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.
சந்தியாராகம் நிகழ்வானது ஒவ்வொரு வருடமும் பாடல் போட்டிகளை நடாத்தி வருவது தெரிந்ததே. சந்தியாராகம் சீனியர் சூப்பர் சிங்கர் போட்டிகளில் மூத்தோர்கள் ஆர்வமுடன் பங்குபற்றி வருவதும் அக்காலங்களில் தம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதும் வரவேற்கப்படுகின்ற விடையமாகும். அந்த வகையில் விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் பணியானது வரவேற்கத்தக்கதாகும்.
நேற்று நடைபெற்ற கவிதைச்சரம் இறுதி நிகழ்வு ஒன்லைன் செயலி ஊடாக நடைபெற்றது. இந் நிகழ்வானது விலா கருணா தலைவர் திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அதில் பல பேர் பங்கு பற்றியிருந்தார்கள்.
இதுவரை நடந்த சந்தியாராகம் பாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பாடல்களும் மற்றும் பலரது பாடல்களும் இங்கு இடம்பெற்றதோடு அழகிய நடனமும் ஒன்று சிறப்பித்து இருந்தது. மேலும் அரவிந்தனின் Keyboard இசை கானமும் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வுகளுக்கிடையில் கவிதை போட்டியில் பங்கு பற்றிய 15 போட்டியாளர்களும் தங்களது கவிதைகளை வாசித்த வண்ணம் இருந்தனர். இந் நிகழ்வினை கிருபா கணேஷ் அழகாக தொகுத்து வழங்கி இருந்தார். கவிதைச் சரத்தின் போட்டிக்கு நடுவர்களாக கோதை அமுதன், வாசுகி நகுலராஜா மற்றும் S.A (அகனி) சுரேஷ் ஆகியோர் அமர்ந்து இருந்தார்கள்.
நிகழ்ச்சி முடிவின் போது கவிதை போட்டியில் 3 பேர் தெரிவு செய்யப்பட்டு பரிசில்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்படி முதலாவது பரிசினை சுகி கணேசலிங்கம் அவர்களும் இரண்டாவது பரிசினை மார்க்கம் சந்திரன் அவர்களும் மூன்றாவது பரிசினை கணேசன் குருநதி அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். இதில் மூன்றாவதாக வெற்றி பெற்ற கணேசன் குருநதி அவர்கள் காலம் சென்றதால் அவரின் மனைவியும் மகனும் அவரின் கவிதையை வாசித்து பரிசினைப் பெற்றுக் கொண்டார்கள். மற்றும் கவிதை போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஏறக்குறைய நான்கு மணி நேரமாக நடைபெற்ற இந் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.