முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நேற்று (சனிக்கிழமை) நாடு முழுவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 1.91 இலட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019 டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெருந்தொற்றாக உருவெடுத்தது. உயிரிழப்புகள், முழு ஊரடங்கால் பொருளாதாரச் சரிவுகள் என உலகமே ஸ்தம்பித்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி உலகின் பல நாடுகளும் தடுப்பூசி தயாரிப்பில் களம் இறங்கின.
இவற்றில் ஒக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஆஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட 6 முதல் 8 மாதங்களுக்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கியது.
இதனைத் தொடங்கிவைத்த பிரதமர், தடுப்பூசிக்கு ஆம் எனச் சொல்லுங்கள், சுகாதார ஒழுக்கத்துக்கும் ஆம் எனச் சொல்லுங்கள் என்று மக்களுக்குக் கோரிக்கை விடுத்தார்.
மேலும் தடுப்பூசி தொடர்பாக வெளியாகும் எதிர்மறை செய்திகளை நம்ப வேண்டாம். தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று கூறினார்.
முதல் நாளான நேற்று 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டது. முதல் நாள் என்பதால் மக்களிடையே சிறு தயக்கம் இருந்ததால் நிர்ணயிக்கப்பட்ட முதல்நாளில் 3,352 மையங்களில் 1,91,181 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 21,291 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் 18,412, மகாராஷ்டிரா 18,238, ஒடிசாவில் 13,746 பேருக்கும் கர்நாடகாவில் 13,594 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. இலட்சத்தீவில் இருப்பதிலேயே மிகக் குறைவாக 21 பேருக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்பட்டது. தமிழகத்தில் 2,945 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.