நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமானுக்கும், கயல்விழிக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது
திரைப்பட இயக்குனரும், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும், மறைந்த முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான காளிமுத்துவின் இளையமகள் கயல் விழிக்கும் இன்று காலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. ஏ. மைதானத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
தமிழ் முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை 10 மணியளவில் பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணி வித்தார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
அரசியல், திரைப்பட பிரபலங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இத்திருமணம் விழாவில் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருமண மேடையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன.