சித்தார்த்துடன் காதலா? என்றதற்கு நான் ஒருவரை காதலிக்கிறேன் அவர் யார் என்பது சஸ்பென்ஸ் என்று பதிலளித்துள்ளார் நடிகை சமந்தா. நான் ஈ திரைப்பட ஹீரோயின் சமந்தா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,
நான் பணக்காரவீட்டு பெண் அல்ல. நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். ஆடம்பர கார், நட்சத்திர ஓட்டல் அறையில் தங்குதல் என்பதெல்லாம் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. அதெல்லாம் எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது. எத்தனையோ பேர் வாழ்வில் உயர்வதற்காக கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே ஜெயிப்பதில்லை. விதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதுதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. சினிமா மூலம் ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்து விடுகிறது.
தோல் அலர்ஜி பிரச்சினையால் மணிரத்னம், ஷங்கர் ஆகியோரின் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதுவும் விதியின் செயல்தான். அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று விதி இருந்தால் நிச்சயம் நடக்கும்.
இந்தி திரைப்படங்களுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நம்பர் ஒன் நடிகை போட்டியிலும் நம்பிக்கை இல்லை. சித்தார்த்துடன் காதலா என்கிறார்கள். நான் ஒருவரை காதலிப்பது உண்மைதான். அது யார் என்பதை இப்போது சொல்லமாட்டேன். திருமணத்துக்கு எனக்கு அவசரம் இல்லை. அதற்கு இன்னும் 4 வருடம் ஆகும் என்றார்.