ராட்டினம்’ என்ற படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் அடுத்ததாக தயாரிக்கும் படம் ‘கல்கண்டு.’
இதில் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். டிம்பிள் சோப்டே என்னும் புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். கே.வி.சுரேஷ் ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு கண்ணன் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் A.M.நந்தகுமார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர், “நகைச்சுவை நடிகர்கள் மக்களை மட்டும் சிரிக்க வைக்கக் கூடாது… அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிபாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும்.
சில நகைச்சுவை நடிகர்கள் கோடி கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். அது நியாயம்தானா..? என்னிடம் 1500 ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரு நகைச்சுவை நடிகர் இன்று கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம். நான் அவர் பின்னால் போனதில்லை.
அந்தக் காலத்தில் நகைச்சுவை நடிகர்கள் ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் படத்தில் நடித்தே அந்த தயாரிப்பாளரையும் மக்களையும் சிரிக்க வைத்தார்கள். ஆனால் இன்று தயாரிப்பாளரை அழ வைத்து, மக்களை சிரிக்க வைக்கிறார்கள் இந்த நகைச்சுவை நடிகர்கள்..” என்றார்.
டி.ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தான் சந்தானம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.