டிஸ்கோ சாந்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
90களில் கவர்ச்சி நடிகையாக் கொடி கட்டிப் பறந்தவர் டிஸ்கோ சாந்தி. மறைந்த நடிகர் சி.எல். ஆனந்தனின் மகளான இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களுக்கும் நடனமாடியிருக்கிறார்.
கடந்த 1996ம் ஆண்டு கவர்ச்சி நடிகை, தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் ஐதராபாத்தில் செட்டில் ஆனார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சென்ற வருடம் அக்டோபர் மாதம் டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கணவர் இறந்த பிறகு டிஸ்கோ சாந்தியின் உடல்நிலையும் மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவருடைய கல்லீரல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் டிஸ்கோ சாந்தியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது.