அமிதாப்பச்சன்-தனுஷ் இணைந்து நடிக்கும் ‘ஷமிதாப்’ என்ற இந்தி படத்தை பால்கி டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல் மற்றும் ‘டிரைலர்’ வெளியிடும் நிகழ்ச்சி, மும்பையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாக நடந்தது.
‘அன்னக்கிளி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 40 ஆண்டுகளாக இசை துறையில் சாதனை புரிந்து வருகிறார். 5 தேசிய விருதுகள், ஏராளமான மாநில விருதுகள், பத்மபூஷன் விருது என பல பெருமைகளை பெற்ற அவர், இதுவரை 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். அவருடைய 1001-வது படமாக, ‘ஷமிதாப்’ அமைந்து இருக்கிறது. இதையொட்டி இந்தி பட உலகம் அவருக்கு பாராட்டு விழா நடத்தி, கவுரவித்தது.
ரஜினிகாந்த்-கமல்ஹாசன்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் விழாவில் கலந்து கொண்டார்கள். இருவரின் முன்னிலையில், விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை அமிதாப்பச்சன் முன்நின்று நடத்தியதுடன், ‘ஷமிதாப்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை மேடையில் பாடினார். இளையராஜாவிடம் அவர் பாட கற்றுக்கொண்ட அனுபவங்களை மேடையில் குறிப்பிட்டார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் பேசும் போது, இளையராஜாவுடனான பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
ஐஸ்வர்யாராய்
விழாவில் ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன், ஸ்ரீதேவி, போனிகபூர், சரிகா, சுருதிஹாசன், அக்ஷரா, இசையமைப்பாளர் பப்பிலகரி, பின்னணி பாடகர் உதித்நாராயண், பின்னணி பாடகி ஸ்ரேயாகோஷல், டைரக்டர் பாலா மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை டைரக்டர் பால்கி செய்து இருந்தார்.
இளையராஜா இசையில் உருவான ‘‘நான் தேடும் செவ்வந்திப்பூவிது,’’ ‘‘யாரடிச்சாரோ’’ ஆகிய 2 பாடல்களை, தனுஷ் மேடையில் பாடினார்.