தமிழர்களின் கலை அடையாளம் சிவாஜி கணேசன் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். ஓர் உடலில் நூறு ஜென்மங்கள் வாழ்ந்தவர் சிவாஜி என்றும் அவர் குறிப்பிட்டார்.
1959-ஆம் ஆண்டு பத்மினி பிச்சர்ஸ் தயாரிப்பில் பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்த படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.
சுமார் 55 ஆண்டுகளுக்குப் பின் நவீன தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தை சாய் கணேஷ் என்ற நிறுவனம் தற்போது வெளியிட இருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தில் உருவான இந்தப் படத்தின் டிரெய்லர் வெளீயிட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ராம்குமார், சித்ரா லெட்சுமணன், ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: வீரபாண்டிய கட்டபொம்மனின் பெருமையை, சிவாஜியின் அருமையை உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால் நிகழ் கால சினிமாவின் நிகழ் கணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் ஒரு திரைப்படம், மூன்று காட்சிகள் ஓடினால் அது குறிப்பிடத்தக்க சம்பவம்.
சனிக்கிழமையும் தொடர்ந்தால் அது சுமாரான வெற்றி. ஞாயிற்றுக்கிழமை நிறைந்தால் அது பெரிய வெற்றி. திங்கள்கிழமையும் அது மாற்றப்படாமல் இருந்தால் அது மாபெரும் வெற்றி. இதுதான் நிகழ்கால சினிமாவின் நிதர்சனமான கவலைக்கிடமான உண்மை.
இப்படிப்பட்ட ஒரு காலக் கட்டத்தில், ஒரு திரைப்படம் வெளியாகி 55 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் புதிய பொலிவோடு தமிழ் திரைக்கு வரும் திறம் உண்டென்றால் அது வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும், சிவாஜிக்கும் மட்டுமே உண்டு.
தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.கே.ராதா, சகஸ்ரநாமம், டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் என தமிழ் கதாநாயகர்களின் குரல்களையெல்லாம் என் மனதின் அடுக்குகளில் பதிய வைத்துப் பார்க்கிறபோது, ஒரே ஒரு தமிழ்க் குரல், ஒரே ஒரு ஆண் குரல் அது சிவாஜியின் குரல் என்றுதான் தோன்றுகிறது. தமிழ் மொழிக்கே பெருமை கொடுத்த குரல் அது.
தமிழர்களுக்கு சில அடையாளங்கள்தான் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஒரு ஆன்மிக அடையாளம். பிரகதீஸ்வரர் கோயில் வரலாற்று அடையாளம். காவிரியும், வைகையும் தமிழர்களின் நீர் அடையாளம். மேற்குத் தொடர்ச்சி மலை தமிழர்களின் பூகோள அடையாளம். சிவாஜிதான் தமிழர்களின் கலை அடையாளம் என்றார் அவர்.