காமெடி நடிகர் விவேக் ‘பாலக்காட்டு மாதவன்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். சந்திரமோஹன் டைரக்டு செய்துள்ளார்.
இந்த படத்தில் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்று பாடல்களை வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் விவேக் பேசியதாவது:–
இந்த நேரம் வரை இப்படத்தின் மீது யாரும் வழக்கு போடவில்லை. இது மகிழ்ச்சியாக உள்ளது. இது எந்த சர்ச்சையும் இல்லாத குடும்ப படம்.
பாலக்காட்டு மாதவன் பட்ஜெட் படம் போல் துவங்கி செலவு அதிகமாகி பெரிய படமாகி விட்டது. மலேசியாவில் இலவசமாக எடுக்கலாம் என்று அழைத்து போனார்கள். ஆனால் பார்த்த இடங்களில் எல்லாம் கட்டணம் வசூலித்து விட்டனர். நான் இதில் பாடல் எழுதி இருக்கிறேன்.
காமெடி நடிகருடன் ஜோடியாக நடிக்க எல்லா நடிகைகளும் தயங்குகிறார்கள். ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தட்டி கழித்து விடுகிறார்கள். நடிக்க மாட்டார்கள். கதாநாயகிகள் எல்லோருமே தங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றால் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பேட்டி எல்லாம் கொடுப்பார்கள். ஆனால் காமெடியையே வாழ்க்கையாக உள்ள சிரிக்க வைப்பதையே தொழிலாக உள்ள காமெடி நடிகருடன் மட்டும் ஜோடியாக நடிப்பதற்கு மறுக்கிறார்கள்.
ஆனால் இந்த படத்தில் என்னுடன் ஜோடியாக நடிக்க சோனியா அகர்வால் சம்மதித்தார். இதற்காக அவருக்கு நன்றி.
திரையுலகில் மதிக்க தகுந்தவர்கள் எழுத்தாளர்கள். ஆனால் அவர்களுக்கு உரிய கவுரவம் இல்லை. மூத்த நடிகை ஷீலா, மனோபாலா, சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன், இமான், பாண்டு, டி.பி.கஜேந்திரன் போன்றோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.