அஜித், திரிஷா ஜோடியாக நடித்த படம் மங்காத்தா. 2011–ல் இப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. வசூலும் குவித்தது. வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.
இதில் அஜித் வில்லத்தனமான கேரக்டரில் நடித்து இருந்தார். மற்ற கதாபாத்திரங்களும் வில்லனாகவே சித்தரிக்கப்பட்டு இருந்தன. வெளிநாட்டில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் முடிவது போல் எடுத்து இருந்தனர்.
மங்காத்தா படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க வெங்கட் பிரபு தற்போது திட்டமிட்டு உள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, மங்காத்தா 2–ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். அதற்குரிய நேரம் வரும் போது அறிவிப்பேன் என்றார். இரண்டாம் பாகத்தை எடுப்பது போன்று தான் கதையையும் முடித்து இருந்தார்.
மங்காத்தா படத்தை இந்தியில் ரீமேக் செய்யவும் முயற்சிகள் நடந்தன. அஜித் கேரக்டரில் நடிக்க சயீப் அலிகான், ஜான் அபிரகாம் போன்றோரிடம் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் பேசப்பட்டது. ஆனால் திடீரென ரீமேக் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.
சூர்யாவை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய ‘மாஸ்’ படம் நேற்று ரிலீசானது. அடுத்து மங்காத்தா 2–ம் பாகம் படவேலைகளில் இறங்க இருக்கிறார்.