செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி ஈழத்தில் நம்பிக்கையூட்டும் திரைக்கலைஞன் | ப்ரியமதா பயஸ்

ஈழத்தில் நம்பிக்கையூட்டும் திரைக்கலைஞன் | ப்ரியமதா பயஸ்

5 minutes read

இலங்கையில் விரல்விட்டு எண்ணும் இயக்குநர்களில் முதல் விரல் எப்போதும் இவருடைய பெயருக்காகவே மடிக்கப்படுகிறது. சிறந்த சமூக அக்கறையும் கலை நுணுக்கங்களுடனும் ,ஆய்வுத்தேடலுடனும் ஈழத்து சினிமாவை சர்வதேச பரப்புக்கு கொண்டு வந்திருக்கும் மதிசுதா இந்தவாரம் இவர் பகுதியை அலங்கரிக்கிறார்.

யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டியை சொந்த இடமாகவும் அழகும் செழுமையும் கொழிக்கும் வன்னியை தன் அடையாள பரப்பாகவும் கொண்ட 35 வயதை மட்டும் அடைந்திருக்கும் மதிசுதா சர்வதேச விருதுகளை அள்ளும் திரைப்படங்களை இலங்கையில் இருந்து தந்துகொண்டிருக்கிறார்.

ஒரு கலைஞன் தன் ஆளுமைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் அடையும் பிரயத்தனங்களே அவனது படைப்புகளாகும் என்பதற்கு மதிசுதாவின் படைப்புகள் உதாரணம் .

வெற்றியை நோக்கி மட்டும் அல்லாமல் தான் கொண்ட இலட்சியம் நோக்கியும் வரலாற்றை கடத்தும் மதிசுதா இயக்குனர்களுக்கு எடுத்துக்காட்டானா படைப்பாளியே.

பல கதைப்போக்குகளை கொண்ட குறுந்திரைப்படங்களை இயக்கி நடித்து இருக்கும் இவர் அண்மையில் இயக்கியுள்ள “வெந்துதணிந்தது காடு” என்ற திரைக்காவியம் மூலம் உலக இரசிகர்களையும் விருது வழங்குநர்களையும் தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார்.

ம.தி. சுதா என்ற அவர் பெயருக்குள்ளேயே அவர் நேசிப்போரின் பெயர்களை பொதித்து வைத்திருக்கின்றார் மகேஸ்வரி தில்லையம்பலம் சுதாகரன் என்பதே இந்த பெயருக்குள் இருக்கும் மர்மம் .

வன்னியின் மல்லாவியில் தன் இளமைக்காலத்தை இனிமையாக தொடங்கிய மதிசுதா ‘ரொக்கெட் ராஜா’ என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஈழ சினிமாவுக்குள் காலடிவைக்கிறார் .நடிகராக வேண்டும் என்கின்ற ஓர்மதில் இருந்த மதிசுதாவுக்கு இயக்குநராகி நடிகராகும் சந்தர்ப்பத்தையும் பெரும் வெற்றி உனக்கு காத்திருக்கிறது என்ற செய்தியையும் காலம் கொடுத்திருக்கிறது .

கள மருத்துவத்தில் கைதேந்தவராக இருக்கும் மதிசுதா, காலம் வீசிய அணுகுண்டை பூப்பந்தாக கைகளில் தாங்கி தனக்கும் சமூகத்துக்கும் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தியிருக்கிறார் . தன் எழுத்துக்கள் மூலமாக வலைத்தளங்களை ஆக்கிரமித்த மதிசுதா “ரொக்கெட் ராஜா “திரைப்படத்தில் கணிசமான வெற்றியை காணவில்லை, அந்த படம் தனக்கு ஒரு அவமான புள்ளி என குறிப்பிடும் அவர் அடுத்ததாக இயக்கிய திரைப்படம்தான் “துலைக்கோ போறியள்” திரைப்படம் ,இந்த திரைப்படம் மூலம் ஓரளவு அவர் தன் பெயரை திரைத்துறையில் பதிக்கிறார் . நடிப்புக்குள் தன்னை ஈடுபடுத்த முனைந்தபோது தனக்கு வந்த நிராகரிப்புக்களை அழகு, நிறம் என்ற போர்வைக்குள் மட்டும் வைத்திருந்த ஈழத்து இயக்குனர்களை அவர் இப்போது விஞ்சி இருக்கிறார் என்பது ஈழசினிமாவுக்கும் வெற்றியையே தந்திருக்கிறது .

தொழில் முறையாக மாறாத இயக்குனர் ஆக தான் இருந்த போதும், ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக இருக்கும் மதிசுதா, ஈழத்து சினிமாவுக்கு ஒரு வரப்பிரசாதம்தான், காலம் நம்மீது திணித்த விடயங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் பெரும் வரலாற்று சக்தியாக இருக்கிறார், தனது பள்ளி தோழர்கள் 14 பேரை அவர் இறுதி யுத்தத்தில் இழந்திருக்கும் வலியை வரலாற்று பாடமாக நினைவு கூறுவதோடு, திரை துறை தொடர்பில் எந்த கல்வியையும் முறைப்படி கற்காதபோதும், யாராவது ஒருவருக்கு கீழ் உதவி இயக்குனராக பணியாற்றாத போதும், அவர் திரைத்துறையில் உறுதியாக தடம்பதிக்க முடிந்த விடயம் அவர் கொண்டுள்ள சமூக பொறுப்புத்தான் என்பதை அவர் பேச்சிலும், படைப்புக்களிலும் நம்மால் நன்கு உணர முடியும் வகையில் இருப்பது கண்கூடு .

எந்த கலைஞனும் தன் படைப்புக்களில் வெற்றிபெறுவது முழுமையான சமூக நல்நோக்கில் என்பதற்கு நம் நாட்டு திரை துறையில் மதி சுதா தற்போது சிறந்த எடுத்துக்காட்டு .

ஈழத்து படைப்புக்களுக்கு இருக்க வேண்டிய தனித்துவ தன்மை அவரது எந்த படைப்புக்களிலும் சிதறிப்போவதில்லை அது மொழியாக இருக்கலாம் அல்லது பண்பாட்டு விழுமியங்களாக கூட இருக்கலாம், ஈழத்து வாசம் ஒவ்வொரு அணுவிலும் வீசும்படியே அவரது படைப்புக்கள் இருப்பது ஈழத்து சினிமா துறைக்கு கிடைத்துள்ள வரலாற்று வெற்றிதான் .

ஆரம்ப காலத்தில் நகைசுவை படங்களை தயாரித்த மதிசுதா இப்போது தயாரிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் நம் கதைகளை கூறும் திரைப்படங்களாக, வரலாற்றை கடத்தும் திரை படங்களாக இருப்பது மிக சிறப்பு .

தற்போது “வெந்து தணிந்தது காடு” என்ற திரைப்படம் இலங்கையில் உருவாக்கப்பட்டு முதலாவதாக வெளியாகும் திரைப்படமாக “i phone” மூலம் எடுத்து சாதனை படைத்து இருக்கிறார், 158 பேர் இந்த திரைப்படத்துக்கு முதலிட்டு இருக்கிறார்கள் ,இதனைவிட இந்த திரைப்படம் இலங்கை அளவில் அதிகளவானோரின் குழு முதலீட்டில் உருவாகும் முதலாவது திரைப்படமாகவும் இந்த திரைப்படம் இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் இறுதிப்போர் தொடர்பான விடயங்களை காட்சிகளாக்கி இருக்கும் இவர், யுத்தத்தின் அடையாளங்களான, பிணங்களையோ, ஆயுதங்களையோ திரைப்படத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் காண்பிக்கவில்லை. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை முன்வைக்கிறார் இயக்குனர் மதிசுதா – ஒரு சமையல் அறையில் அனைத்து பொருட்களையும் வைத்துக்கொண்டு சமைக்கும் உணவைவிட ஒருசில பொருட்களை வைத்துக்கொண்டு சமைக்கும் உணவு மிக சுவையாக இருக்கும் என்கிறார் – அதாவது தனது தயாரிப்புக்களுக்கு ஒரு வட்டம் இருக்கும் அதன் எல்லைக்குள் பணியாற்றுவதையே தான் முக்கியப்படுத்துகிறேன் என்கிறார் – மதில்மேல் பூனையாக இருந்து இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கும் அவர் கதைக்கரு உறுதியானதாக இருக்க போர் என்ற கருப்பொருளை வில்லனாக வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை கதாபாத்திரங்களாக சித்தரித்திருக்கிறார் என்பது வெளியாகிறது .போர் என்கின்ற அந்த வில்லனை மட்டும் மக்கள் மத்தியில் குற்றவாளி ஆக காட்டி இருக்கிறார் மதிசுதா – ஆகையால் போர் என்பது எல்லோருக்கும் வில்லனாகதான் இருக்கும் என்பதை நாசுக்காக விளக்கிய அவர் இரத்தம், சதை ,ஆயுதம் அனைத்தையும் வில்லனின் தோன்றாக்கருக்களாக்கி படத்தை நகர்த்தி இருப்பது தெரிகிறது – திரைத்துறையில் தான் இந்த படத்தின் மூலம் நஸ்டத்தையோ அல்லது பின்னடைவுகளையோ சந்திக்க கூடாது என்கின்ற நோக்கோடு வரலாற்று பதிவையும் இலகுவாக்கி இருக்கிறார் என்பதும் தெரிகிறது .

இவரின் ஒரு சமூக தெளிவுபடுதல் படமாக வெளிவந்த “மிச்சக்காசு” என்கின்ற திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கதையாக வெளிப்படுத்தும் இவர் எல்லோராலும் பேசப்பட்ட ஒரு திரைப்படத்தை தன் அடையாளமாக கொண்டார் என்பதற்கு இந்த மிச்சக்காசு திரைப்படம் தகுந்த சான்றாகிறது – இதே கதைக்கருவை தமிழ்நாட்டில் நான்குபேரால் அந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதுதான் சிறந்த படைப்பாளிக்கான முத்திரை ஆகிறது .

ஈழத்து திரை இயக்குனர்களின் ஒட்டுமொத்த பக்கங்களில் இருந்தும் மதிசுதாவின் படைப்புக்களும், பக்கங்களும் வேறுபட்டு இருப்பதை அனைவரும் அறிவார்கள் – இதற்கு அவர் கொண்டிருக்கும் , வரிந்துகொண்டுள்ள மக்கள்மீதான, வரலாறுமீதான அதீத அக்கறைதான் என்பதை அவர் வெளிப்படுத்த தவறவில்லை, தான் வளர்ந்த இடம், வளர்க்கப்பட்ட இடம், என்பவைகூட அவர் தன் படைப்புகளுக்கான தாக்கமாகவும், வேகமான விவேகமாகவும் கருதுகிறார் – காலம் இட்டிருக்கும் சில விடயங்களை வரலாற்று கடத்தல்களை தன் திறமைமூலம் வெளிக்கொணரும் சரியான உத்தியை, பாதையை அவர் பற்றி இருக்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார் .

தென்னிந்திய சினிமாவில் இருந்து நமது படைப்பாளிகள் வேறுபட்டவர்கள் என்பதை எப்படி காட்ட முனையலாம் என்பதை அவரிடம் அறிய முனைந்தபோது நல்ல கதைக்கருவை கொண்ட தென்னிந்திய சினிமாவை அவர் பலகோணங்களில் பாராட்டியே ஆகவேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார் ,ஆனாலும் பெரும்பாலானா ஈழத்து படைப்புகளில் தயாரிப்பாளர்கள் யார் என்பதை ஈழத்து இயக்குனர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை மதிசுதா சுட்டிக்காட்டுகிறார், முதலீட்டாளர்கள் தனியே பணத்தை மட்டும் கொடுத்துவிடுதல் மட்டும் போதும் என்பது ஈழத்து சினிமாவுக்கு பொருந்தவரவில்லை முதலீட்டாளர்கள் திரை இயக்கத்தின் இயங்கு புள்ளிக்கு வரும்போது எங்களின் சினிமாவும் ஒரு தனித்துவத்தை நோக்கி செல்லும் என்று நம்புகிறார். பணமும் பெயரும் மட்டும் இலக்காக வைக்கப்படும்போது மட்டும் எம் தனித்துவம் கெடும்முகமாக இருப்பதோடு சில சில விடயங்கள் தவிர்க்கப்படுவது துர்பாக்கியமாவதோடு எமது தனித்துவம், மொழி, வாழ்வியல், என்கின்ற படைப்புக்கள் எங்கள் மக்கள் மத்தியில் வெற்றிபெறுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார் .

வெந்து தணிந்தது காடு என்கின்ற இறுதிப்போரின் குறியீட்டு படத்திற்கு அவர் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருப்பது ஈழ சினிமாவிற்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக சொல்லப்போனால் சமகாலத்தில் ஈழத்து சினிமாவுக்கான திருப்புமுனை இயக்குனராக மதிசுதா தன் கால்தடத்தை பதித்து இருக்கிறார் .

”வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இதுவரை 10 சர்வதேச விருது விழாக்களில் 18 விருதுகளை பெற்றிருக்கின்றது.
1) Birsamunda International Film Festival இல்
Honorable Mention For Best All catagery
2) கேரளாவில் இடம்பெறும் Cuckoo International Film Festival இல்
Honorable Mention For Best All catagery
3) Golden Leaf International Film Festival இல்
Best Writer
Best Producer
4) Hodu International film festival இல்
Best Debut Film
Special Jury Award for Best International Feature Film
5) Marudham Indie Film Festival இல்
Best Asian Film
6) Madras Independent Film Festival இல்
Special Mention

ஆகிய விருதுகளை வெண்றுகுவித்திருக்கிறது . ஈழத்து சினிமாவுக்கு முக்கிய அடிக்கல்லாக – வரலாற்று திடமாக மதிசுதாவின் படைப்புக்கள் இன்னமும் வெளிவர வேண்டும் என்பதே அனைவரதும் அவா .

ப்ரியமதா பயஸ்

நன்றி – காலைக்கதிர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More