மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்து வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு ‘காட்பாதர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை தமிழ் இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இதில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் இயக்குனர் பூரி ஜெகன்நாத், சத்யதேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
தமன் – பிரபுதேவா – சிரஞ்சீவி – மோகன் ராஜன்
இந்நிலையில் இப்படத்தில் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் இணைந்து நடனமாடும் நடனத்தை பிரபுதேவா வடிவமைக்கிறார்.
இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, “அரங்கமே அதிரும் வகையில் பிரபுதேவாவின் நடன வடிவமைப்பில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் அவர்களும் இணைந்து நடனமாட இருக்கிறார்கள்.
திரையில் காணும்போது ரசிகர்களின் உற்சாகம் கரை புரளும்” என பதிவிட்டு இருக்கிறார். அதனுடன் இயக்குனர் மோகன் ராஜா, பிரபுதேவா, சிரஞ்சீவியுடன் தமன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.