மனோரமா – சினிமா துறையில் நன்கு பரிச்சயமான பெயர். தென்னிந்திய திரைப்பட பழம்பெரும் நடிகையான மனோரமா இந்திய சினிமா வரலாற்றில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ் ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அழைக்கப்பட்டவர். ஆண் நடிகர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலுக்கு நிகராக கோலோச்சி, ‘பெண் சிவாஜி’ எனப் பெயர் வாங்கியவர்.
தென்னிந்திய முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணாதுரை, மு. கருணாநிதி, ஜெயலலிதா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., முன்னாள் ஆந்திர முதலமைச்சரும் நடிகருமான என்.டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்துள்ளார்.
இளமைக்காலம்
மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. காசியப்பன் ‘கிளாக்குடையார்’ – ராமாமிர்தம் தம்பதிக்கு மகளாக, மே 26, 1937 அன்று தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் பிறந்தார்.
மனோரமாவின் தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராக பணியாற்றினார். அவர் மனோரமாவின் தாயார் ராமாமிர்தம் அவர்களின் தங்கையை இரண்டாம் தாரமாக திருமணம் புரிந்ததால், கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு, கணவரால் புறக்கணிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டு, சிறுமியாக இருந்த மனோரமாவை அழைத்துக்கொண்டு காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் குடிபெயர்ந்தார், ராமாமிர்தம் அம்மாள்.
மனோரமா ஆறாம் வகுப்பு வரை படித்தார். அதன் பிறகு குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் போனதால், அங்குள்ள செட்டியார் வீடுகளில் வேலை செய்தார். அதுமட்டுமன்றி, தாயாரோடு சேர்ந்து பலகார வியாபாரமும் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார்.
திரைப்பயணம்
மனோரமா நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது, 12 வயதிலாகும். ‘பள்ளத்தூர் பாப்பா’ என செல்லமாக அழைக்கப்பட்ட இவருக்கு நாடக இயக்குநர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் ‘மனோரமா’ என பெயரிட்டனர்.
ஆரம்பத்தில் ‘வைரம் நாடக சபா’ நடத்தும் நாடகங்களில் சிறு வேடங்களை ஏற்று நடித்து வந்தார், மனோரமா. அக்காலத்தில் புதுக்கோட்டையில் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு மனோரமா பி.ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.
மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட எஸ்.எஸ். ராஜேந்திரன், அவரை தனது ‘எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்’ சேர்த்துக்கொண்டார். அதன் பிறகு இந்நாடக நிறுவனத்தின் ‘மணிமகுடம்’, ‘தென்பாண்டி வீரன்’, ‘புது வெள்ளம்’ உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் மனோரமா நடித்தார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு மனோரமாவுக்கு கிடைத்தது. எனினும், அந்த திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்றுவிட்டது.
அடுத்து, நடிகவேல் எம்.ஆர். ராதா தனது நாடக சபாவினால் நடத்திவந்த ஒரு நாடகத்தை, அவரது தம்பி எம்.ஆர்.பாப்பாவுடன் சேர்ந்து திரைப்படமாக தயாரித்தார். அதிலும் ஒரு முக்கிய வேடத்தில் மனோரமா நடித்தார். அந்த திரைப்பட பணிகளும் பாதியில் நின்றது.
அதற்கடுத்த முயற்சியாக, கவிஞர் கண்ணதாசன் தயாரித்த சொந்த திரைப்படமான ‘மாலையிட்ட மங்கை’ திரைப்படத்திலேயே மனோரமா இடையூறின்றி முழுமையாக நடித்து முடித்தார். அதுவே அவர் நடித்த முதல் திரைப்படமாக அமைந்தது. அந்தப் படம் 1958இல் வெளியானது. மனோரமா கதாநாயகியாக நடித்த முதல் படம் ‘கொஞ்சும் குமரி’ (1963).
மனோரமா தமிழில் மட்டுமன்றி, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், சிங்களம், கன்னட ஆகிய மொழிகளிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்துள்ளார். நடன மாஸ்டர் சூர்யகலா தான் இயக்குநர் மஸ்தானுக்கு மனோரமாவை பரிந்துரை செய்ததாக சொல்லப்படுகிறது.
‘கந்தன் கருணை’, ‘சரஸ்வதி சபதம்’, ‘எதிர்நீச்சல்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘விக்ரம்’, ‘அண்ணாமலை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘நாட்டாமை’, ‘நான் பெத்த மகனே’, ‘வள்ளல்’, ‘சாமி’, ‘ஒற்றன்’, ‘பேரழகன்’, ‘சிங்கம்’ என இவர் தனது பன்முக நடிப்பால் பல தலைமுறைகளை தொட்டிருக்கிறார். அம்மாவாக, அண்ணியாக, பாட்டியாக, குணச்சித்திர வேடங்களை ஏற்று அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இவரது நகைச்சுவைகள் இன்றளவும் தனித்து நிற்கின்றன என்றால் அது மிகையாகாது.
நகைச்சுவை கதாபாத்திரங்கள்
“நீங்கள் எப்படி சினிமாவில் நடிக்க வந்தீர்கள்” என ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டபோது, “இதற்கு எல்லாம் கண்ணதாசன் தான் காரணம். 1958இல் ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் என்னை நடிக்க வைத்து என் வாழ்க்கையை மாற்றியவர் அவர் தான். அது ஒரு நகைச்சுவையான பாத்திரம். என்னை மிகவும் வற்புறுத்தி நடிக்க சொன்னார். நகைச்சுவையாளராக என்னால் நடிக்க முடியாது என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவரோ என்னிடம், ‘நீங்கள் ஒரு கதாநாயகியாக மட்டுமே படங்களில் நடிக்கப் போகிறீர்கள் என்றால், இங்குள்ளவர்கள் உங்களை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தொழில் துறையிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள். ஆனால், நகைச்சுவை பாத்திரங்களை ஏற்பதால் உங்களுக்கு சிறந்த இடமுண்டு. உயர்ந்த சிகரங்களை எட்டுவதற்கான திறமையும் உங்களிடம் உள்ளது’ என்றார், கண்ணதாசன். அப்போதுதான் எனக்கு நம்பிக்கை பிறந்தது. தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தேன்…” என மனோரமா கூறினார்.
அவர் நடித்த படங்களில் சுமார் 50 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் நாகேஷுடன் அவருக்கு சமமான சவாலான பாத்திரங்கள் வழங்கப்பட்டன. நாகேஷும் மனோரமாவும் திரை ஜோடியாக கைகோர்த்த 1960 -69 காலப்பகுதி மறக்க முடியாதது. நகைச்சுவை நடிகர் தங்கவேலுவுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘வல்லவனுக்கு வல்லவன்’ (1965) படம் இருவருக்குமே பாராட்டு பெற்றுக்கொடுத்தது.
பின்னர் 1970 – 80களில் சோ, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளி ராஜன் போன்ற நகைச்சுவை நடிகர்களோடும் இணைந்து நடித்திருந்தார், மனோரமா.
பின்னணிப் பாடகி
மனோரமா அவரே நடித்த தமிழ்ப் படங்களில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய முதல் பாடல் “தாத்தா தாத்தா பிடி குடு..” ‘மகளே உன் சமத்து’ என்ற திரைப்படத்தில் அமைந்த இப்பாடலை ஜி.கே. வெங்கடேஷ் இசையமைத்தார். அவரது மிகப் பிரபலமான பாடல் “வா வாத்தியாரே ஊட்டான்டே….” இந்தப் பாடல் சோவுடன் நடித்த ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் இடம்பெற்றது. V. குமாரின் இசையில் அமைந்திருந்தது.
அடுத்து, ‘சூரியகாந்தி’ படத்தில் அவர் பாடிய “தெரியாதோ நோக்கு…” பாடல் இன்று வரை ஜனரஞ்சகமாக கேட்கப்படுகிறது. அதேபோல் ‘மே மாதம்’ படத்துக்காக பாடிய “மெட்ராஸ சுத்திப் பார்க்க போறேன்…” பாடலும் அருமை. இவ்வாறாக இன்னும் பல பாடல்கள் உள்ளன.
இளம் தலைமுறையினரோடு ‘ஆச்சி’
மனோரமா தனது வயதான காலத்தில் இளம் திறமையாளர்களையும் வளரும் இயக்குநர்களையும் கூட ஆதரித்தார். அதற்கு எடுத்துக்காட்டாக, 2013ஆம் ஆண்டில் எல்.ஜி.ஆர் சரவணன் இயக்கிய ‘தாயே நீ கண்ணுறங்கு’ என்ற தமிழ் குறும்படத்தில் புற்றுநோயாளியாகவும், நடிகர் ஸ்ரீகாந்தின் தாயாகவும் நடித்திருந்தார்.
நடிகர் திலகமும் ‘பெண்சிவாஜி’யும்
சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நகைச்சுவை பாத்திரம் ஏற்று நடித்த மனோரமா ‘ஞானப்பறவை’ படத்தில் ஜோடியாக நடித்து தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொண்டார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீது அளவற்ற பாசம் கொண்டவர், மனோரமா. மனோரமாவின் தாயார் மறைந்த போது அவரது இறுதிக் கிரியைகள் அனைத்தையும் அவருக்கு மகனாக இருந்து சிவாஜி கணேசனே மேற்கொண்டார். சிவாஜி கணேசன் குடும்பத்தில் மனோரமாவும் ஒரு நேசமிகு உறவாக இருந்தார்.
பேசப்பட்ட கதாபாத்திரங்களில் சில…
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் ஜில் ஜில் ரமாமணி – ரோசா ராணி, ‘நடிகன்’ படத்தில் சத்யராஜை காதலிக்கும் வயதான பெண், ‘காசி யாத்திரை’யில் இரட்டை வேடம், ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படத்தில் சண்டைக்காட்சியில் அடித்து நொறுக்கும் பாட்டி, ‘சின்னத்தம்பி’ படத்தில் விதவைத்தாய் என இவர் நடித்த கதாபாத்திரங்கள் வரவேற்புக்குரியவை.
விருதுகள்
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதோடு, பத்மஸ்ரீ, கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளையும் வென்று குவித்தவர், ஆச்சி மனோரமா.
இல்லற வாழ்க்கை
மனோரமா 1964ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பெனியைச் சேர்ந்த எஸ்.எம். ராமநாதனை காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்றொரு மகன் பிறந்தார். 1966இல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கணவரை பிரிந்து சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
இலங்கைக்கு வருகை
1980களில் நடிகர் சிவகுமாருடன் இலங்கைக்கு மனோரமா வருகை தந்திருந்தார். அப்போது நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய ஒரு விழாவில் கலந்து கொண்டார். இவ்விழாவில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன கலந்துகொண்டார்.
அடுத்து, கொழும்பில் நடைபெற்ற ‘சிவாஜிக்கு புகழாஞ்சலி’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இலங்கை வந்திருந்தார். அந்நிகழ்ச்சியில் ஆச்சி மனோரமாவை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததையும் இங்கே பதிவிடுகின்றேன்.
இறுதிப் பேட்டி
2015இல் பிபிசி வானொலிக்கு மனோரமா இறுதியாக வழங்கிய நேர்காணலில், அவரது வாழ்க்கையைப் பற்றி ஏதேனும் வருத்தம் இருக்கிறதா என கேட்கப்பட்டபோது இவ்வாறு பதிலளித்தார்…
“எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் இந்த வாழ்க்கையில் ஆசீர்வதிக்கப்பட்டவள். எனது அடுத்த பிறவியில் கூட, நான் மீண்டும் மனோரமாவாக பிறக்க விரும்புகிறேன். இதே வாழ்க்கையையும் என்னைச் சுற்றியுள்ள இதே மக்களையும் நான் பெற விரும்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, என் அம்மாவை மீண்டும் அடைய விரும்புகிறேன்.
ஒருவேளை நான் ஒரு கதாநாயகியாக மட்டுமே நடிக்க தீர்மானித்திருந்தால், சினிமா உலகிலிருந்து மறைந்து போயிருக்கலாம்…. நான் எனது துறையில் நகைச்சுவையாளினியாக முடிவெடுத்து, கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்கள் ஆகின்றன….” என்றார்.
“1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க உங்களால் எப்படி முடிந்தது” என கேட்கப்பட்டபோது,
“கடவுளின் நம்பிக்கை இல்லாமல், நான் பல படங்களில் நடித்திருக்க முடியாது. என் வாழ்க்கையில் நடந்தது…. நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள். ஆனால், நான் இன்னும் செயல்பட வேண்டும் என்ற வெறி எனக்குள் இருக்கிறது. என் வெற்றிக்கு காரணமான ஒருவர் என் அம்மா. அவர் வாழ்க்கையில் எனக்காக எல்லாவற்றையும் செய்தார். நான் அவரை இழக்கின்றேன் இப்போது… அவர் கண்ணீரை உதிர்க்கின்றார்… நான் வாழ்க்கையில் எதை சாதித்தாலும், அது அவரால் தான்…” என கூறினார்.
ரசிகர்களை நீண்ட வருடங்களாக சிரிக்க வைத்த மனோரமா 2015 ஒக்டோபர் 10 அன்று ரசிகர்களை அழவைத்துச் சென்றதை யாராலும் மறக்க முடியாது. தனது 78ஆவது அகவையில், மாரடைப்பு காரணமாக மனோரமா காலமானார்.
“தமிழ்த் திரை கண்டெடுத்த அற்புதம் மனோரமா என்ற ஒப்பற்ற கலைஞர்.”
– எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ், கம்பளை.