வணிகரீதியாக வெற்றி அடைந்துள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் பலராலும் பாராட்டப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம், நம் வாழ்வில் இன்று முக்கியமான அங்கமாகிவிட்ட செல்பேசியின் பயன்பாட்டை அந்தப் படம் விவாதிப்பதுதான். குறிப்பாக இளைய தலைமுறையானது செல்பேசியுடன் முழுமையாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டிருப்பது முடிவற்ற பட்டிமன்ற விவாதப் பொருள் ஆகியுள்ளதை அறிவோம்.
உள்ளபடி சொன்னால் செல்பேசி கடந்த பத்தாண்டுகளில் சமகால வாழ்வில் மிகப் பெரிய, புரட்சிகர மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸப், ட்விட்டர் உள்ளிட்ட தகவல் பரிமாற்றத் தளங்களின் பயன்பாடு அந்தரங்க வாழ்விலிருந்து, உலக அரசியல் வரை மிகப் பெரிய மாறுதல்களைக் கொண்டுவந்துள்ளது. இவை ஏற்படுத்தியுள்ள, ஏற்படுத்திவரும் தாக்கத்தைத் தத்துவார்த்த மானுடவியல் கோணத்தில் மதிப்பிட இன்னும் சில பத்தாண்டுகள் தேவைப்படும். ஏனெனில், மிக விரிவான சமூகப் பரப்பில் ஆழமான மாறுதல்கள் ஏற்பட்டுவருகின்றன என்பதே உண்மை.
அத்தகைய மாற்றங்களில் முக்கியமானது, பெண்களுக்குக் கிடைத்திருக்கும் புதிய மெய்நிகர் (virtual) சமூகவெளி. குறிப்பாக அது பாலியல் சமன்பாடுகளில் (gender equations) எதிர்பாராத மாறுதல்களை உருவாக்கிவருகிறது. இதுநாள் வரை சமூகத்தில் பெண்களுக்குக் கிடைத்திராத ஒரு புது வகை உறவின் சாத்தியம், அதாவது நேரில் சந்திக்காமலேயே நட்புகொள்ளும் சாத்தியம் பெரியதொரு மாற்றத்தை அவர்கள் அந்தரங்க வாழ்வில் ஏற்படுத்திவருகிறது. இந்தப் புதுவெள்ளத்தில் நல்லதும், தீயதும் கலந்துதான் வரும்.
செல்பேசியின் மூலம் உருவாகும் ஓர் அந்தரங்க சுயம், மெய்நிகர் உலகில் அதன் வெளிப்பாடு என்பதற்கும் அன்றாட வாழ்க்கையில் அதே நபர் ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளுக்கும் நிலவும் இடைவெளி, வேறுபாடுகள், பூடகத் தொடர்புகள் எல்லாமே ஆய்விற்கும் சிந்தனைக்கும் உரியவை. ‘லவ் டுடே’ திரைப்படம் இந்த முக்கியமான, சுவாரஸ்யமான ஒரு களத்தைத்தான் சித்தரிக்க முயல்கிறது.
பிரச்சினை என்ன?
சிக்கல் என்னவென்றால், ‘லவ் டுடே’ திரைப்படத்தால் பெண்களுக்கு எதிரான பழைய ஆணாதிக்க மனோபாவத்தைக் கடந்து சிந்திக்க முடியவில்லை. அது மட்டுமின்றி செல்பேசிப் பயன்பாட்டில் வெளிப்படும் மனோவிகாரங்கள், ஆபாச செயல்பாடுகள், அநாகரீகங்களை அது சரியான கோணத்தில் கண்டிப்பதற்குப் பதிலாக அவற்றை நகைச்சுவையாகச் சித்தரித்து இயல்பாக்கம் செய்துவிடுகிறது. “இந்தக் காலத்துப் பசங்க இப்படித்தான்” என்ற எண்ணத்தை உருவாக்குவது மிகவும் ஆபத்தானது. கடுமையான விமர்சனத்திற்கு உரியது.
அந்தரங்கம் என்பது என்ன?
நவீன வாழ்வின் அச்சாரமே சுதந்திரமான தனிநபர் என்பதுதான். அந்தத் தனிநபரின் உரிமைகள், தேவைகள் ஆகியவற்றை அனுசரித்து, அவர்கள் மனோதர்மத்தின்படி வாழ்வதற்கான சூழலைச் சமூகம் தருவது ஆகியவையே நவீன விழுமியங்கள்.
ஜாதியோ, மதமோ, குலமோ, கோத்திரமோ, சடங்கு சம்பிரதாயங்களோ, மரபுகளோ எதுவுமே அவர்கள் சுதந்திரத்தை மட்டுப்படுத்தக் கூடாது. அதன் ஒரே எல்லை இன்னொரு நபரின் சுதந்திரத்தில் தலையிடாமல், மட்டுப்படுத்தாமல் இருப்பதுதான். “வாழு, வாழவிடு” என்று சுருக்கமாகக் கூறலாம்.
அந்தரங்கத்தின் மீதான தாக்குதல்
இத்தகைய தனிநபரின் விருப்பு, வெறுப்புகள், ஆசைகள், விழைவுகள், உணர்வுகள் எல்லாம் அந்தரங்கமானவை என்பது இதன் உப விளைவு, ஆதாரம். ஐரோப்பாவில் பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் டைரி எனப்படும் நாட்குறிப்புகளை எழுதுவதில் இது முதலில் வெளிப்பாடு கண்டது. ஒருவரது அந்தரங்க நாட்குறிப்பை மற்றவர் படிப்பது என்பது இந்த நவீன அந்தரங்கத்தின் புனிதத்தைச் சீர்குலைப்பதாகும். பிறர் டைரி கையில் கிடைத்தாலும் படிக்காமல் இருப்பதே உயர் ஒழுக்கம், சீலம் என்று போற்றப்படும்.
ஜெயகாந்தன் 1960களில் ‘அந்தரங்கம் புனிதமானது’ என்று ஒரு சிறுகதை எழுதினார். சென்னையில் வாழும் கல்லூரி பேராசிரியர் சுந்தரம், அவருடன் கல்லூரியில் படித்த நாகரிகமான வேறொரு ஜாதியைச் சேர்ந்த பெண்ணை மணந்துகொள்வார். அதனால் கோபித்துக்கொண்டு உறவைத் துண்டித்த சுந்தரத்தின் தந்தை கணபதியாப் பிள்ளை, பேரன் பிறந்ததும் புதுப்பித்துக்கொள்வார். தானே பேரனை வளர்ப்பதாகக் கோரி கூட்டிச் சென்றுவிடுவார்.
தாத்தா பாட்டியுடன் மரபார்ந்த சூழலில் வளர்ந்த மகன் வேணு, கல்லூரிப் படிப்பு முடிந்ததும் பெற்றோருடன் வாழ வருவான். அவர்களது நாகரீக வாழ்வு அவனுக்கு அசூயையைத் தரும். அதற்கு சிகரம் வைத்தாற்போல் தந்தைக்கு வேறொரு பெண்ணுடன் நட்பு இருப்பது அவனுக்குத் தெரியவரும். தந்தையின் அறைக்குச் சென்று அவர் மேஜையைக் கள்ளச்சாவி போட்டுத் திறந்து அந்தப் பெண்ணின் காதல் கடிதங்களை எடுத்துவிடுவான். அதை ஆதாரமாகக் கொண்டு தந்தையைக் குற்றஞ்சாட்டுவான்.
இந்த விஷயத்தில் அவன் தந்தை, தாய் இருவருமே, ‘நீ ஏன் தந்தையின், பெற்றோரின் அந்தரங்க வாழ்வில் தலையிடுகிறாய்?’ என்று அவனைத்தான் கண்டிப்பார்கள். தந்தையின் அந்தரங்கக் கடிதங்களை அவன் எப்படி படிக்கலாம் என்று கேட்பார்கள். வேணுவுக்கு அவர்கள் நாகரீக சிந்தனை புரியாமல் ஊருக்கே திரும்பிப் போய்விடுவான்.
ஜெயகாந்தன் இந்தக் கதையில் அந்தரங்கம் என்ற நவீன விழுமியத்தை முன்னிலைப்படுத்தி, சுந்தரத்தின் பெண் உறவு அவருக்கும், அவர் மனைவிக்கும் இடையிலான பிரச்சினையே தவிர அதில் பிறர் தலையிடக் கூடாது என்பதை வலியுறுத்துகிறார். மேலும், அவர் மனைவியே கணவனைக் கண்காணிப்பதோ கேள்வி கேட்பதோ இல்லை.
ஆபாசம்
அந்தரங்கம் என்றாலே அது கட்டற்ற பாலியல் இச்சையின் களம் என்ற தவறான புரிதலும் இங்கே பரவலாக இருக்கிறது. இயக்குநர் வசந்த் எடுத்த ‘சிவரஞ்சினியும் மற்றும் சில பெண்களும்’ படத்தில் ஒரு கதையில் பெண் டைரி எழுதுவதே பிரச்சினை ஆகும். அவள் ஏன் ரகசியமாக ஏதோ எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்று குடும்பம் கேட்கும். இதுபோன்ற தருணங்களில் அந்தரங்கம் என்பது ரகசியம் எனக் கருதப்பட்டு ரகசியம் விதிமீறலுடன், ஆபாசத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
இப்படித்தான் ‘லவ் டுடே’ திரைப்படத்திலும் யோகி பாபு அவர் செல்பேசியை யாரிடமும் தர மறுப்பது அவரை சந்தேகத்திற்கு உரியவராக மாற்றுகிறது. அதற்குக் காரணம் படத்தின் கதாநாயகன் பிரதீப் செல்பேசி வழி பல முறையற்ற செயல்களில் ஈடுபடுகிறான். அவனது குற்றமுள்ள மனம்தான் யோகி பாபுவை சந்தேகிக்கக் காரணம் ஆகிறது.
கதாநாயகன் பிரதீப் பழக்கமில்லாத பெண்களிடம் திரைப்படம் எடுக்கப்போவதாகக் கூறி அவர்களை பலவிதமான ஆடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்கிறான். இது மிகவும் அருவருக்கத்தக்க, ஆபாசமான ஒரு மனப்பான்மை. பெண் உடலைப் பண்டமாக்கி நுகரும் சிறுமை.
மேலும் ஒரு ஃபேக் ஐடியை ஒரு பெண்ணின் பெயரில் உருவாக்கி அதனை அவன் நண்பர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதை அவர்கள் சைபர் கிரைம் எனும் வரையறைக்குள் வரும் பல குற்றச்செயல்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு ஆபாசமான செய்திகள் அனுப்புகிறார்கள். கதாநாயகியின் தங்கைக்கே அப்படிப்பட்ட செய்திகள் அந்த ஐடியிலிருந்து வருகின்றன. பிரதீப் அவற்றை தான் அனுப்பவில்லை என்று சொல்கிறானே தவிர, இப்படி ஒரு ஃபேக் ஐடியை ஏன் நண்பர்களின் குற்றவியல் கேளிக்கைகளுக்காகப் பகிர்ந்துகொள்கிறான் என்பது கேள்விக்கு உட்படுத்தப்படுவதில்லை.
அநாகரீகம்
இந்தப் படத்தின் ஒன்லைன் எனப்படும் கதையின் மைய இழையே தவறாக இருக்கிறது. ஜெயகாந்தன் சுட்டிக்காட்டிய அந்தரங்கத்தில் தலையிடாமை என்ற விழுமியத்திற்கு நேர் எதிராக சத்யராஜ் தன் பெண்ணையும், அவளை காதலிக்கும் இளைஞனையும் ஒருவர் அந்தரங்கத்தில் மற்றவர் நுழைந்து பார்க்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.
இதற்கு சத்யராஜ் கூறும் காரணம் ஒருவரை ஒருவர் முழுமையாக ‘பார்க்க’ வேண்டும், அதாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். இது முற்றிலும் பிழையான கருத்தாகும். சுயம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியதே அது ஏதோ பெட்டியில் வைத்து பூட்டப்பட்ட பொருள் அல்ல என்பதுதான். சுயம் என்பது இயக்கபூர்வமானது. அறியப்பட்ட பிரபஞ்சத்தினைக் கடந்து செல்லும் கருந்துளை. யாரும் யாரையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது. அவசியமும் இல்லை. நம்பிக்கையும், காதலும்தான் வாழ்க்கை.
இறுதியில் ‘லவ் டுடே’ படமும் அதைத்தான் சொல்கிறது. நம்பிக்கையும், காதலும்தான் வாழ்க்கை என்கிறது. ஆனால், நடுவில் பிறருடைய வாட்ஸப்பைப் படித்துப் பார்க்க வேண்டும் என்கிறது. சத்யராஜ் அவர் விதித்த அநாகரீகமான நிபந்தனைக்கு வருந்துவதே இல்லை. படம் பார்ப்பவர்க்கும் இளைஞர்களுக்கும் வாட்ஸப்பில் ‘பலான மேட்டர்’ இருக்கும் என்ற எண்ணமே தோன்றும்படிதான் எடுக்கப்பட்டுள்ளது. புரிதலை அல்ல; சந்தேகத்தையே விதைக்கிறது படம்.
இதைவிட மோசம் பாலியல் சமமின்மை. கதாநாயகியின் வாட்ஸப்பில் கிடைக்கும் ரகசியம் அவள் தொடர்ந்து தன் எக்ஸ் எனப்படும் முன்னாள் காதலனான ஆண் நண்பனுடன் வாஞ்சையாகப் பேசிக்கொண்டிருந்தாள், அந்த நண்பனுடன் இரவில் காரில் தொலைதூரப் பயணம் செய்தாள் என்பதுதான். அது கதாநாயகனுக்கு மிகப் பெரிய மன உளைச்சலைத் தருகிறது. அவளிடம் மிருகத்தனமாக அவள் பாலியல் உறவுகொண்டாளா என்று பச்சையாகக் கேட்கிறான்.
நேர் எதிராகக் கதாநாயகனைப் பற்றி கிடைக்கும் ரகசியம் என்னவென்றால், அவன் பெண்களிடம் பொய் பேசி அவர்கள் டிரைபல் (?) ஆடைகள் அணிந்த புகைப்படங்களைச் சேகரித்து பார்த்து மகிழும் வக்கிரம் பிடித்தவன் என்பது. ஃபேக் ஐடி உருவாக்கி பல குற்றச்செயல்களுக்கு வழி வகுப்பவன் என்பது.
ஆனால், இறுதியில் இரண்டும் ஒன்றுதான் என்று சமன் செய்யப்படுகிறது. கதாநாயகின் முகத்தை ஓர் உடலுறவுக் காணொளியில் ஒருவன் மார்ஃப் செய்து வெளியிட, அனைவரும் அவளை அருவெறுக்கிறார்கள். கதாநாயகன் அது அவளல்ல என்று நம்புகிறான். அவன் நண்பர்கள் மார்ஃபிங்க் செய்தவனைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
எத்தனை ஆபாசமான செயல்களைச் செய்தாலும், அநாகரீகமான செயல்களைச் செய்தாலும் கதாநாயகன்தான் கதாநாயகியைக் காப்பாற்ற வேண்டும் என்பதால், பெண்களின் சார்புத்தன்மையை இந்தப் படம் நிலைநிறுத்துகிறது. அதற்கு அடுத்தபடி அவர்கள் மெய்நிகர் உலகில் புழங்குவதே ஆபத்தானது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது (நாளைக்கு கட்டிக்கப் போறவனுக்கு தெரிஞ்சா?)
ஆங்கிலத்தில் மிசோஜினி (misogyny) என்று ஒரு வார்த்தை உண்டு. தமிழில் பெண் வெறுப்பு எனலாம்.
வெறுப்பு என்றால் பிடிக்காது என்ற பொருளில் அல்ல. பெண்களின் சுதந்திரத்தை வெறுப்பது, அவர்களை ஆணுக்குக் கீழ்படிந்த நிலையில் வைத்திருப்பது ஆகியவையும்தான். ‘லவ் டுடே’ நகைச்சுவை, சமகால இளைஞர்கள் உளவியல் என்ற பெயரில் பெண் வெறுப்பை இயல்பானதாக சித்தரிப்பது தவறானது.
இதுபோன்ற கதையாடல்கள் பெண்களை மெய்நிகர் வெளியிலிருந்து விலக்கும் அபாயம் கொண்டவை என்ற விழிப்புணர்வு பெண்களுக்கும் வேண்டும்; ஆண்களுக்கும் வேண்டும்!
ராஜன் குறை கிருஷ்ணன்
ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.
நன்றி – அருஞ்சொல்