அம்மு என்கிற ஜெயலலிதா
ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளி. ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பிறந்து வளர்ந்தது மைசூரில். பல மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த ஜெயலலிதா நாட்டியம், இசை ஆகியவைகளிலும் கற்று தேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் இருந்த ஜெயலலிதா பார்த்தசாரதி குழுவின் ஆங்கில நாடத்தில் அறிமுகமானார்.
சினிமாவில் ஜெயலலிதா
தமிழ் சினிமாவில் முதலில் ஜெயலலிதா அறிமுகமான படம் வெண்ணிற ஆடை. அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெற்றதும் அடுத்தடுத்து ஜெயலலிதாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருந்தன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று எம்ஜிஆருடன் அவருக்கு கிடைத்த வாய்ப்பு. எம்ஜிஆருடன் நடித்த பிறகு மக்கள் மனதில் எளிதாக நுழைந்தார் ஜெயலலிதா. அவருடன் மொத்தம் 28 படங்களில் ஜெயலலிதா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பில்லா படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா
இப்படிப்பட்ட சூழலில் ரஜினிகாந்த்தை வைத்து இயக்குநர் பாலாஜி பில்லா படத்தை இயக்கினார். அதில் கதாநாயகியாக நடிக்க ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் ரஜினி சினிமா கேரியரில் அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருந்தார். எனவே ரஜினியுடன் ஜெயலலிதா நடிக்க மறுத்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ரஜினியுடன் நடிக்க மறுக்க காரணம் என்ன?
ஜெயலலிதா ரஜினியுடன் நடிக்க மறுத்ததற்கு பல காரணங்கள் ஆரூடமாக சொல்லப்பட்டன. ஆனால் அந்த சமயத்தில் எம்ஜிஆரின் நிழலாகவே இருந்த ஜெயலலிதா அரசியலில் நுழைந்துவிட வேண்டுமென்ற பெரும் ஆவலில் இருந்தார். சினிமாவிலும் நடித்துக்கொண்டு அரசியலில் களமிறங்கினால் அது அரசியல் பாதையில் தடுமாற செய்யலாம் என நினைத்ததால் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலிருந்து ஒதுங்க ஆரம்பித்திருந்தார் ஜெயலலிதா. அதனால்தான் ஜெயலலிதாவால் ரஜினியுடன் நடிக்க முடியவில்லை என்றே பலரால் கருதப்படுகிறது.
சினிமா இல்லாவிட்டாலும் ஜெயலலிதா ராணிதான்
சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதா ஒதுங்க ஆரம்பித்திருந்த சமயத்தில் தனியார் பத்திரிகை ஒன்று ஜெயலலிதா பட வாய்ப்புகளுக்காக போராடுகிறார். அவர் சினிமாவில் இறுதிக்காலத்தில் இருக்கிறார் என கட்டுரை ஒன்றை எழுதியது. அதற்கு 6 பக்கங்களுக்கு பதில் எழுதிய ஜெயலலிதா, “நான் சினிமாவில் வாய்ப்புகளுக்காக போராடுகிறேன் என எழுதியிருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் நான் அப்படி போராடவில்லை. சமீபத்தில்கூட (1980) பில்லா படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால் அதனை நான்தான் வேண்டாம் என்று சொன்னேன். சினிமா இல்லாமலும் என்னால் ராணியாக வாழ முடியும்” என அந்தப் பதிலில் ஜெயலிதா தெரிவித்திருந்தார்.
நன்றி : tamil.filmibeat.com