வான் மூன்று – விமர்சனம்
தயாரிப்பு : சினிமாக்காரன்
நடிகர்கள் : ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, டெல்லி கணேஷ், லீலா சாம்சன், அபிராமி வெங்கடாசலம், வினோத் கிஷன் மற்றும் பலர்.
இயக்கம் : ஏ எம் ஆர் ரமேஷ்
மதிப்பீடு : 2.5/5
படமாளிகைகளில் வாரந்தோறும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் தற்போது முன்னணி டிஜிட்டல் தளங்களிலும் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகி டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பினை பெற்று வருகிறது.
அந்த வகையில் அறிமுக இயக்குநர் ஏ எம் ஆர் ரமேஷ் இயக்கத்தில் தயாரான ‘வான் மூன்று’ எனும் திரைப்படம், ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இது டிஜிட்டல் தள ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.
மூன்று வெவ்வேறு வயதினை சேர்ந்த மூன்று ஜோடிகளின் காதலை அதற்குரிய இயல்புடன் விவரிக்கிறது இந்த ‘வான் மூன்று’ படத்தின் திரைக்கதை.
காதலில் தோல்வியற்ற இளம் ஆண் மற்றும் இளம் பெண் இருவரும் தற்கொலைக்கு முயற்சித்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் இருவரும் சந்திக்கும்போது இருவருக்கிடையே காதல் மலர்கிறது. இவர்கள் இணைந்தார்களா? இல்லையா? என்பது ஒரு கதை.
வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இல்லற வாழ்க்கையை தொடங்குகிறார்கள் வினோத் கிருஷ்ணன் மற்றும் அபிராமி வெங்கடாசலம் ஜோடி. இந்த தம்பதியினர் தந்தையின் அனுமதி கிடைத்த பிறகு தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தீர்மானிக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு மூளையில் கட்டி என ஒரு அதிர்ச்சியான தகவல் வர இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள்.
அவர்களை பெற்றோர்கள் மீண்டும் அரவணைத்துக் கொண்டார்களா? அவர்கள் மீண்டும் வாழ்க்கையில் ஒன்றிணைந்து குழந்தையை பெற்றுக் கொண்டார்களா? என விவரிக்கிறது மற்றொரு கதை.
டெல்லி கணேஷ் – லீலா சாம்சன் தம்பதியினர் 40 ஆண்டு கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்துவிட்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் லீலாவிற்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்க அதற்காக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் 7 லட்சம் ரூபாயை அவர் திரட்ட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.
டெல்லி கணேஷால் அந்த பணத்தை திரட்டி மனைவியின் உயிரை காப்பாற்ற முடிந்ததா? இல்லையா? என்பதை மற்றொரு கதை விவரிக்கிறது.
இந்த மூன்று கதையையும் நான் லீனியர் பாணியில் சுவாரசியமாகவும் ஃபீல் குட்டாகவும் சொல்லி இருக்கிறார் அறிமுகம் இயக்குநர் ஏ எம் ஆர் ரமேஷ்.
இவருக்கு வசனங்கள் பக்க பலமாக உதவி புரிந்திருக்கிறது. குறிப்பாக ‘மனைவி என்கிறவங்க சில கடவுளுக்கே கிடைக்காத வரம் ‘, ’25 வயசுல வர்றதில்ல 65 வயசுல எது ஞாபகம் இருக்கோ அதுதான் லவ் ‘போன்றவை கவனம் ஈர்க்கிறது.
நடிப்பை பொறுத்தவரை திரையில் தோன்றும் அனைத்து கதாபாத்திரங்களும் தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
டெல்லி கணேஷ், அபிராமி வெங்கட், வினோத் கிஷன், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், லீலா சாம்சன் என நடிப்பின் வரிசையை பட்டியிடலாம்.
காட்சி அமைப்பு, திரைக்கதை என அனைத்தும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இருந்தாலும் கலைஞர்களின் நடிப்பாலும், தொழில்நுட்ப கலைஞர்களின் முழுமையான பங்களிப்பாலும் பார்வையாளர்களால் இதனை இடைநிறுத்தம் செய்யாமல் பார்க்க இயலுகிறது.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை, கலை இயக்கம் அனைத்தும் இயக்குநரின் கரங்களை வலுப்படுத்தி இருக்கிறது.
உணர்வு பூர்வமான படைப்பை காண விரும்பும் ரசிகர்களுக்கு இந்த மூன்று வானமும் செவ்வானம் தான்.