தயாரிப்பு : மதுரை அழகர் மூவிஸ் & வைட் லாம்ப் பிக்சர்ஸ்
இயக்கம் : பி. மணிவர்மன்
மதிப்பீடு : 3/5
கிரைம் திரில்லர் ஜேனரிலான திரைப்படங்களுக்கு அடர்த்தியான திரை கதையும், விறுவிறுப்பான காட்சி அமைப்பும், குறைந்த அளவிற்கான லாஜிக் மீறலும் இருப்பது தான் இன்றைய ட்ரெண்ட். இதற்கு ஏற்றார் போல் உருவாகி வெளியாகி இருக்கும் ‘ஒரு நொடி’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தொடர்ந்து காண்போம்.
சேகரன் ( எம். எஸ். பாஸ்கர்)எனும் சாதாரண மனிதர், கரிமேடு தியாகு ( வேல. ராமமூர்த்தி )எனும் லோக்கல் தாதா+ கந்துவட்டிக்காரரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்காக வட்டியும் அசலுமாக எட்டு லட்சம் ரூபாய் பணத்துடன் வீட்டிலிருந்து கிளம்புகிறார். நெடு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சகுந்தலா ( ஸ்ரீ ரஞ்சனி) எனும் அவரது மனைவி காவல்துறையில் புகார் அளிக்கிறார். காணாமல் போனவர் என வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணையை தொடங்குகிறது. காவல்துறையின் விசாரணை நடைபெறுகையில் நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் பார்வதி ( நிகிதா) என்ற இளம் பெண் கொலை செய்யப்படுகிறார். காணாமல் போன சேகரனுக்கும், கொலை செய்யப்பட்ட பார்வதிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதன் பின்னணி என்ன? யார் கொலை செய்தார்கள்? சேகரன் என்னவானார்? என்பதுதான் படத்தின் விறுவிறு திரைக்கதை.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கதையின் நாயகனான தமன் குமார் அந்த வேடத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். அவரது குரலும், கண்களும் கதாபாத்திரத்தை எளிதாக ரசிகர்களின் மனதில் கடத்துகிறது. இயல்பான.. அசத்தலான நடிப்பை வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். வலுவான அரசியல் பின்னணியில் இருக்கும் நபர்களைக் கூட சந்தேகப்பட்டால் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்து விசாரிக்கும் பாணி ரசிகர்களுக்கு புது டானிக்.
எம் எஸ் பாஸ்கர், ஸ்ரீரஞ்சனி, கஜராஜ், தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக், விக்னேஷ் ஆதித்யா, கருப்பு நம்பியார் என ஒவ்வொரு கதாபாத்திரமும் அளவான நடிப்பில் திரையில் தோன்றி ரசிகர்களை கவர்கிறார்கள்.
கதை களத்திற்கு ஏற்ப சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை பரபரப்பை வழங்கி இருக்கிறது. ஒரே காட்சி வசனங்களை விசாரணையின் போது வெவ்வேறு கோணங்களில் காட்டி ரசிகர்களின் கண்களை கொள்ளை கொள்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்தீஷ்.
லாஜிக் மீறல்கள் இல்லாமல் இல்லை. குறிப்பாக நீதிமன்றத்தில் கரிமேடு தியாகு, ‘ சம்பவம் நடைபெற்ற நாளில் நான் சேகரனை நேரில் சந்திக்கவில்லை’ என்ற உண்மையை ஏன் சொல்லவில்லை? என்பதும் பார்வதி கொலை செய்யப்பட்ட இடத்தில் மோப்ப நாயை ஏன் வரவழைக்கப்படவில்லை.? என்பதும், பருதி. இளமாறன் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு கொலை வழக்கு பற்றிய ரிப்போர்ட்டை சமர்ப்பித்தாரா? இல்லையா? அவர்களின் உத்தரவுக்கு இவர் கீழ்ப்படிந்தாரா? இல்லையா? என்பதும் என பல விடயங்கள் வினாக்களாகத் தொக்கி நிற்கிறது. இப்படி பல லாஜிக் மீறல்கள் ஓட்டைகள் இருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் இவையெல்லாம் பெரிதாக தெரியவில்லை. மேலும் யாரும் யோசிக்காத வகையில் உச்சகட்ட காட்சி அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் பலம்.
இருந்தாலும் இரண்டு மணி நேரம் கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த படைப்பை விறுவிறுப்பாக வழங்கியதற்காக இயக்குநர் மணிவர்மன் மற்றும் அவருடைய குழுவினரை மனமார பாராட்டலாம்.
ஒரு நொடியில் நாம் யோசிக்காமல் எடுக்கும் முடிவு எவ்வளவு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஓரளவு நேர்த்தியாக விவரித்திருக்கும் ஒரு நொடி திரைப்படத்தை தாராளமாக ஒரு முறை பட மாளிகைக்கு சென்று காணலாம்.
ஒரு நொடி – அதிரடி