தயாரிப்பு : பெசன் ஸ்டுடியோஸ் & தி ரூட்
நடிகர்கள் : விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் மற்றும் பலர்.
இயக்கம் : நித்திலன் சாமிநாதன்
மதிப்பீடு : 2.5 / 5
குரங்கு பொம்மை என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த படைப்பாளி நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் என்பதாலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் அவரது ஐம்பதாவது திரைப்படம் என்பதாலும் மகாராஜா படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டு இது வன்முறை மிகுந்த திரில்லர் திரைப்படம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாலும் மகாராஜா படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனை இந்தத் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை தொடர்ந்து காண்போம்.
சென்னையில் முடி திருத்தும் நிலையம் ஒன்றை நடத்தி வரும் மகாராஜா (விஜய் சேதுபதி) தன்னுடைய வீட்டில் பாதுகாத்து வைத்திருக்கும் லஷ்மி என பெயரிடப்பட்டிருக்கும் பொருள் ஒன்றைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். காவலர்களின் விசாரணையில் லஷ்மி என்பது குப்பைத் தொட்டி என தெரிய வருகிறது. அந்த குப்பைத் தொட்டிக்கும் மகாராஜா குடும்பத்தினருக்கும் உள்ள உணர்வுபூர்வமான உறவு என்ன? அதன் பின்னணி என்ன? என காவல்துறை விசாரிக்க தொடங்குகிறது. காவல்துறையினரின் விசாரணைக்கு மகாராஜா ஊக்கத்தொகையையும் வழங்குகிறார். இதன்பின் நடைபெறும் விசாரணையில் மகாராஜாவின் மகளான ஜோதிக்கு மன அழுத்தம் தரும் செயல் ஒன்றை மர்ம கும்பல் ஒன்று மேற்கொள்கிறது. அந்த செயல் என்ன? அந்த கும்பல் யார்? அவர்களை காவல்துறையினர் கண்டறிந்தார்களா ?அவர்களுக்கு மகாராஜாவின் எதிர்வினை என்ன? இதனை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
உண்மையில் விவரிக்க வேண்டும் என்றால் இது விஜய் சேதுபதி மற்றும் பொலிவூட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் ஆகிய இரண்டு நாயகர்களின் கதை. ஒருவர் தர்மத்தின் வழியில் பிடிவாத குணத்துடன் பயணிக்க மற்றொருவர் அதர்மத்தின் வழியில் பயணிக்கிறார். சூழ்நிலை காரணமாக அதர்மத்தின் வழியில் பயணிக்கும் அனுராக் காஷ்யப் தன் வாழ்க்கையில் சூறாவளியாக வீசிய புயலுக்கு காரணம் தர்மத்தின் வழியில் பயணிக்கும் விஜய் சேதுபதி எனக் கருதி அவரை பழிவாங்க தீர்மானிக்கிறார். இறுதியில் யார் யாரை பழி வாங்கினார்கள்? யார் யாருக்கு மன்னிப்பு வழங்கினார்கள்? என்பதை நான் லீனியர் பாணியில் உச்சகட்ட காட்சி வரை திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையாக சொல்லப்பட்டிருக்கிறது.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டியவனை சட்டத்தால் தண்டிக்கப்பட்டவனை நாயகன் தற்கொலைக்கு தூண்டுவது எந்த வகையிலான கதை என்பதை இயக்குநரும், படக் குழுவினரும் விவரித்து விளக்கினால் தான் இதில் படைப்பாளிகளின் சமூகப் பொறுப்புணர்வு எப்படி இருக்கிறது? என்பதனை தெரிந்து கொள்ள இயலும்.
மகாராஜாவாக விஜய் சேதுபதி வழக்கம் போல் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.
செல்வம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அனுராக் காஷ்யப் சொதப்பலான திரைக்கதையிலும் தனது பங்களிப்பை நிறைவாக செய்து ரசிகர்களின் மனதை கவர்கிறார்.
இவர்களை தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நட்ராஜ், வில்லனாக நடித்திருக்கும் சிங்கம் புலி.. ஆகியோர் ரசிகர்களின் மனதை தங்களுடைய சிறப்பான நடிப்பால் கவர்கிறார்கள்.
நான் லீனியர் பாணியில் கதை சொல்லப்பட்டதால் எந்த சம்பவம் முன்னர் நடந்தது? எந்த சம்பவம் பின்னர் நடந்தது? என்பதனை புரிந்து கொள்வதில் பார்வையாளர்களுக்கு குழப்பமே மிஞ்சுகிறது. இவ்விடயத்தில் இயக்குநரும், படத்தொகுப்பாளரும் கஷ்டப்பட்டு குழம்பி இருக்கிறார்கள். இதனால் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிகிறது.
விஜய் சேதுபதியின் நடிப்பை கடந்து இப்படத்தை பட மாளிகையில் ரசிப்பதற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனும், இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத்தும் பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
சிகை திருத்தும் தொழிலாளி- வாடிக்கையாளர்களின் முகத்தின் மீது கத்தி எனும் ஆயுதத்தை மென்மையாக பயன்படுத்துவார். அதனால் அவர்களுடைய கைகள் மென்மையாகத்தான் இருக்கும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கு நேர் எதிராக மகாராஜாவின் கதாபாத்திர வடிவமைப்பு தொடக்கத்தில் திரைக்கதையில் இடம் பிடித்திருக்கிறது. இது ஏன்? என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
முதல் பாதி திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும் இடம்பெறும் எக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு ஓரளவுக்கு ஆறுதல் தருகிறது. இரண்டாம் பாதியில் உச்சகட்ட காட்சியை தவிர திரைக்கதை வேகமாக பயணித்தாலும், எதிர்பாராத திருப்பங்கள் இடம்பெற்றாலும், தொய்வைத்தான் ரசிகர்களுக்கு தருகிறது.
உச்சகட்ட காட்சிக்காக இயக்குநரை பாராட்டலாம் என்றாலும் அந்த இடத்தில் மகாராஜா எனும் கதாபாத்திரம் மக்களைக் காக்கும் மகாராஜாவாக உயர்வடையவில்லை.
மகாராஜா – உதவாத ஜோக்கர்.