தயாரிப்பு : ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் & திங்க் ஸ்டுடியோஸ்
நடிகர்கள் : ஆர். ஜே. பாலாஜி, செல்வராகவன், சானியா ஐயப்பன், கருணாஸ், நட்டி என்கிற நட்ராஜ், பாலாஜி சக்திவேல், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா மற்றும் பலர்
இயக்கம் : சித்தார்த் விஸ்வநாத்
மதிப்பீடு : 2.5/5
”இந்திய சிறைகளில் எழுபது சதவீதத்தினருக்கு மேல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாத விசாரணை கைதிகள் தான் உள்ளதாகவும், அவர்களின் வாழ்வியலை சொர்க்கவாசல் திரைப்படம் பேசுகிறது” என்றும் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் படத்தின் வெளியீட்டின் போது கூறியதால் வித்தியாசமான கதைக்களம் என்ற எதிர்பார்ப்பு வெகுஜன பார்வையாளர்களிடத்தில் ஏற்பட்டது.
அவர்களின் இந்த எதிர்பார்ப்பை ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் நிறைவு செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
வீதியோர உணவகம் ஒன்றை தனது தாயாருடன் இணைந்து நடத்தி வருகிறார் பார்த்திபன் ( ஆர். ஜே. பாலாஜி). இவருக்கு அரசு துறையில் உயர் பதவியை வகிக்கும் அதிகாரி ஒருவர் நட்பாக இருக்கிறார். இந்த குடும்பத்திற்கு வழிகாட்டியாகவும், ஆலோசனை வழங்கும் நபராகவும் அவர் இருக்கிறார்.
இந்த தருணத்தில் அந்த அரசு உயர் அதிகாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார் பார்த்திபன். அங்கு அவர் சிகாமணி ( செல்வராகவன்) என்ற கொடூர கொலை குற்றவாளி சந்திக்க விரும்புகிறார். அந்த சிகாமணி சிறையில் இருக்கும் பெரும்பாலான கைதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சிறைச்சாலையை தன்னுடைய ஆதிக்கத்திற்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் பார்த்திபன் – சிகாமணி சந்திப்பு நடைபெற்றதா? குற்றமே செய்யாத பார்த்திபன் விடுதலை ஆனாரா? இல்லையா? அவன் சிறைக்கு சென்ற பின் கிடைத்த அனுபவம் என்ன? இதனை விவரிப்பது தான் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் கதை.
சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதிகளின் நாளாந்த நடவடிக்கையும், அவர்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்காக காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கையும், இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சதி- நம்பிக்கை துரோகம் -குற்றச் செயல் -மனித உரிமை மீறல்- இதனை விவரமாக விவரிக்கிறது இத்திரைப்படம்.
சிறையில் கைதிகளிடையே கலவரம்- வன்முறை -போதை மருந்து பாவனை- காவல்துறையினருக்கும், குற்றவாளிகளுக்கும் இருக்கும் மறைமுக உறவு – என பல விடயங்கள் இருப்பதை அப்பட்டமாகவும், ஒரளவு நம்பகத் தன்மையுடன் விவரிப்பதால் படத்தை ஓரளவு ரசிக்க முடிகிறது.
சிறையை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சிகாமணியை வீழ்த்துவதற்காக காவல்துறையினர் திட்டமிடுகிறார்கள். இதற்கு பார்த்திபனை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள் காவல்துறையினர். இதனால் சிறைக்குள் கலவரம் நடைபெறுகிறது. அந்தக் கலவரத்தில் காவல்துறையினரின் சதி திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பதும் பரபரப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
சிறையில் நடைபெற்ற கலவரம் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் சிறை காவலர்கள் முதல் பாதிக்கப்பட்ட மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் நடந்த விபரங்களை கூறுவது போல் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை உத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதுவே இந்த திரைப்படத்திற்கு தனித்துவமான அடையாளத்தையும் வழங்குகிறது.
இந்த திரைப்படத்தில் சிறை காவலராக நடித்திருக்கும் கருணாஸ் நேர்த்தியான நடிப்பை வழங்கி, ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஆர். ஜே. பாலாஜி கதாபாத்திரத்தினை உணர்ந்து நடிக்காமல் தன்னுடைய பாணியில் வளைக்க முயற்சித்திருக்கிறார்.
ஆனால் இயக்குநர் ஓரளவே அவரிடம் இருந்து வேலையை வாங்கி இருக்கிறார்.இருந்தாலும் வழக்கமான நடிப்பிலிருந்து ஆர்.ஜே. பாலாஜி வித்தியாசமாக நடிக்க முயற்சித்திருக்கிறார். சிகாமணி என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவனின் தெரிவும் பொருத்தமானதாக இல்லை.
அந்த கதாபாத்திரத்தின் கனத்திற்கு ஏற்ற அளவிற்கு உடல் மொழியாலும் வசன உச்சரிப்பாலும் அந்த கதாபாத்திரத்தை சாதாரண கதாபாத்திரமாக மாற்றி விடுகிறார் செல்வராகவன். இந்த இடத்தில் இயக்குநர் இன்னும் கூடுதலாக மெனக்கட்டிருக்கலாம்.
ஆர். ஜே. பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருக்கும் மலையாள வரவு சானியா ஐயப்பன் இயல்பை மீறி நடித்து ரசிகர்களை எரிச்சலூட்டுகிறார். சிறையில் விசாரணை நடத்தும் அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர் நட்டி என்ற நட்ராஜ் தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நடித்து கவனம் ஈர்க்கிறார். இவர்களைத் தொடர்ந்து சிறை அதிகாரி சுனில் குமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் ஷஃரப் உதீன் அசலான சிறைத்துறை உயர் அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார்.
சிறையில் இருக்கும் சிறிய கதாபாத்திரங்கள் கூட திரைக்கதைக்கு உதவும் வகையில் நேர்த்தியாக வடிவமைத்து பார்வையாளர்களின் கவனத்தை இயக்குநர் கவர்ந்திருக்கிறார். அதே தருணத்தில் சிறைச்சாலை தொடர்பான கதை என்பதாலும் கதாபாத்திரங்களில் உரையாடல்கள் இயல்பாக அமைத்திருப்பதும் கவனத்தை கவர்கிறது.
ஒளிப்பதிவாளர் – படத்தொகுப்பாளர்- பின்னணி இசையமைப்பாளர்- கலை இயக்குநர் – ஆகிய தொழில்நுட்பக் கலைஞர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி, இயக்குநரின் படைப்புக் கனவை மெய்ப்பித்திருக்கிறார்கள்.
இருந்தாலும் சிறைச்சாலை என்பது சமூகத்தில் உள்ள பொது மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அச்சுறுத்தலையும், இடையூறையும் ஏற்படுத்தியவர்கள் இருக்கும் இடம் என்பதால் சிறைச்சாலை தொடர்பான படைப்புகள் வெகுஜன மக்களிடத்தில் வரவேற்பை பெறுவதில்லை.
இதுபோன்ற திரைப்படங்கள் வெளியாகி சிறைச்சாலையிலும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் சொர்க்கவாசலை ஓரளவுக்கு வரவேற்கலாம்.