சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘படை தலைவன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உன் முகத்தை பார்க்கலையே..’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை இசையமைத்த இசையமைப்பாளர் இசைஞானி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் யூ. அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘படை தலைவன்’ எனும் திரைப்படத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த், யாமினி சந்தர், இயக்குநரும், நடிகருமான கஸ்தூரிராஜா, ஏ . வெங்கடேஷ், ‘கருடா’ ராம், முனீஸ்காந்த், அருள்தாஸ், யூகி சேது, ரிஷி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருக்கிறார். அடர்ந்த வனமும், வனத்தில் வாழும் மக்களின் வாழ்வியலை பேசும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை சுமீத் ஆர்ட்ஸ்- வி ஜே கம்பைன்ஸ் – தாஸ் பிக்சர்ஸ் – ஆகிய நிறுவனங்கள் சார்பில் சுமீத் சாய்கல்- ஜெகநாதன் பரமசிவம் – ராஜு காளிதாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘உன் முகத்தை பாக்கலையே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் ‘இசை ஞானி’ இளையராஜா எழுத, பின்னணி பாடகி அனன்யா பட் பாடியிருக்கிறார்.
இசைஞானியின் வழமையான மயக்கும் மெட்டில் உருவாகி இருக்கும் இந்த பாடல் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இதனிடையே நடிகர் திலகத்தின் நட்சத்திர வாரிசான விக்ரம் பிரபு கும்கி எனும் திரைப்படத்தின் யானையுடன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து திரையுலகில் பிரபலமானார் என்பதும்.. அதே பாணியில் கேப்டன் விஜயகாந்த் நட்சத்திர வாரிசான சண்முக பாண்டியன் படைத்தலைவன் படத்தின் யானையுடன் தோன்றுவதால் இந்தப் படமும் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.