தமிழ் திரையுலகில் கடுமையாக போராடி முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் ‘ வணங்கான் ‘எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ முகிலின் மேலே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
முத்திரை பதித்த படைப்பாளி பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வணங்கான் ‘எனும் திரைப்படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, ஜான் விஜய் , மிஷ்கின், ராதா ரவி ,ரிதா ,சாயா தேவி, சிங்கம் புலி, ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். பி. குரு தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி ஸ்டுடியோஸ் மற்றும் வி ஹவுஸ் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘முகிலின் மேலே பகலில் தோன்றும் பிறையும் நீதானே’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் செல்வ மீரா எழுத பின்னணி பாடகி சைந்தவி பாடியிருக்கிறார். இரண்டரை நிமிடத்திற்கும் குறைவான நீளம் கொண்ட இந்தப் பாடலுக்கான காணொளியில் தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனைக்காக ஒன்று கூடி இருப்பவர்களுக்கிடையே இளம் பெண் ஒருவர் இயேசு பிரானை நினைத்து பாடுவது போல் அமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.