தயாரிப்பு : வி ஆர் டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி பிரைவேட் லிமிடெட்
நடிகர்கள் : சுந்தர் சி, தான்யா ஹோப், ஹீபா பட்டேல் , கமல் காமராஜ், அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், ‘தலைவாசல்’ விஜய், டி எஸ் கே மற்றும் பலர்.
இயக்கம் : வி ஆர் மணி சேயோன்
மதிப்பீடு : 2/5
சுந்தர் .சி இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றி பெற்று ஒரே தருணத்தில் நடிப்பு & இயக்கம் என இரட்டை சவாரி செய்வதில் வல்லவர். அவருடைய நடிப்பில் தயாராகி இருக்கும் இந்த ‘வல்லான்’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
வழக்கமான கிரைம் திரில்லர் ஜேனரிலான திரைப்படம். இதுபோன்ற திரைப்படங்களில் பார்வையாளர்களின் யூகத்திற்கும், திரையில் தோன்றும் காட்சிகளுக்கும் இருக்கும் இடைவெளி தான் இயக்குநரின் வெற்றியை தீர்மானிக்கும். அந்த வகையில் இயக்குநர் வி. ஆர். மணி சேயோன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘வல்லான்’ ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்துகிறது.
சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ள இளம் தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் இறக்கிறார். இது தொடர்பான வழக்கு காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்குகிறது. விசாரணையில் எந்தவித துப்பு கிடைக்காமல் காவல்துறை தடுமாறுகிறது. இதனால் காவல்துறையின் உயர் அதிகாரி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியான சுந்தர் .சியிடம் இந்த வழக்கை பிரத்யேகமாக துப்பு துலக்குமாறு ஒப்படைக்கிறார்.
அவருடைய விசாரணையில் இந்த கொலை தொடர்பான பல புதிய தகவல்கள்- தடயங்கள் கிடைக்கிறது. அதனை வைத்து கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதும், கொலைக்கான காரணம் என்ன? என்பதும் தான் படத்தின் கதை. இதற்கிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் காவல் அதிகாரியான சுந்தர் சி யின் சொந்த வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கான காரணத்தையும் அவர் தேடுகிறார். அதற்கான விடையையும் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் இதன் திரைக்கதையில் இணைந்து பயணிக்கிறது.
முதல் பாதியில் காட்சிகள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமான எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிப்பதால் ரசிக்க வைக்கிறது. இரண்டாவது பாதியில் கதையின் நாயகனான காவல் அதிகாரியின் சொந்த வாழ்க்கை பற்றிய பிளாஷ்பேக் காட்சிகள் எப்போது முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதில் சுந்தர் சி க்கு டூயட் வேறு வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு மீண்டும் சுவராசியமான திருப்பங்களை வைத்து படத்தை நிறைவு செய்கிறார் இயக்குநர். முதல் பாதியில் கிடைத்த பட மாளிகை அனுபவம் இரண்டாம் பாதியில் குறைகிறது. ஆனால் உச்சகட்ட காட்சியில் இயக்குநர் ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறார்.
சுந்தர் சி கதையும் நாயகனாக நடித்திருக்கிறார். சீருடை அணியாமல் புலனாய்வு செய்யும் காவல் அதிகாரியாக நடித்து, தனது திரை தோற்றத்தால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். பிளாஷ்பேக்கில் அவருடைய காட்சிகள் கலகல கொமர்ஷல்.
நாயகியாக நடித்திருக்கும் தான்யா ஹோப், அழகாக இருக்கிறார். இளமையாக இருக்கிறார். நாயகனை காதலிக்கிறார். பாட்டு பாடுகிறார். பின்பு கொலையாகிறார். திரைக்கதையின் நகர்வுக்கும் காரணமாகிறார்.
ஹீபா பட்டேல் – ரசிகர்களை தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும், ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தாலும் எளிதாக கவர்கிறார்.
இளம் தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ்- வழக்கமான வில்லன் வேடத்தில் தன் ஷட்டிலான நடிப்பை வழங்கி, ரசிகர்களின் கவனத்தை கவர முயற்சிக்கிறார்.
இதுபோன்ற கிரைம் இன்வெஸ்டிகேட் திரில்லர் ஜேனரிலான திரைப்படத்திற்கு படத்தொகுப்பு என்பது முதன்மையான காரணி. பார்வையாளர்களுக்கு குழப்பமில்லாமலும் சொல்ல வேண்டும் விறுவிறுப்பாகவும் சொல்ல வேண்டும் . இதை மனதில் வைத்து காட்சிகளை தொகுத்து நேர்த்தியாக வழங்கி இருக்கிறார். இதற்காக இவருக்கு பாராட்டு தெரிவிக்கலாம். இவருக்கு ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி உள்ளனர்.
லாஜிக் மீறல்கள் உண்டு. இருந்தாலும் கதை பயணிக்கும் வேகத்தில் பார்வையாளர்கள் இழுத்துச் செல்லப்படுவதால் படத்தை ஓரளவு ரசிக்க முடிகிறது.
வல்லான் – தேய் பிறை