செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விடாமுயற்சி | திரைவிமர்சனம்

விடாமுயற்சி | திரைவிமர்சனம்

3 minutes read

தயாரிப்பு : லைக்கா புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் : அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசண்ட்ரா, டி.ஜே. அருணாச்சலம் மற்றும் பலர்.

இயக்கம் : மகிழ் திருமேனி

மதிப்பீடு : 2.5 / 5

முன்னணி நட்சத்திர நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டில் எந்த திரைப்படங்களும் வெளியாகாததால் அவருடைய ரசிகர்கள் ‘விடா முயற்சி’ திரைப்படத்தை பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவருடைய எதிர்பார்ப்பை படக்குழுவினர் பூர்த்தி செய்தார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

அர்ஜுன் ( அஜித்குமார் ) அஜர்பைஜான் எனும் நாட்டில் உள்ள பாகு எனும் இடத்தில் வசிக்கிறார். அவர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் கயல் ( திரிஷா) எனும் பெண்ணை சந்தித்த தருணத்திலேயே காதலிக்க தொடங்குகிறார். இருவரும் மூன்று மாதங்கள் காதலித்த பின் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு இல்வாழ்க்கை தொடங்கிய சில ஆண்டுகளுக்குள் கயலுக்கு கரு கலைப்பு ஏற்படுகிறது. இதனால் தம்பதிகள் இருவருக்கும் இடையே விரிசல் உண்டாகிறது . இந்த தருணத்தில் கயல், தனக்கும், மற்றொரு ஆணுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி அர்ஜுனிடம் விவாகரத்து கேட்கிறார். அர்ஜுன் பேச்சுவார்த்தை மூலம் உறவை நீட்டிக்கலாம் என தெரிவிக்கிறார். ஆனால் விவாகரத்து பெறுவதில் கயல் உறுதியாக இருக்கிறார். அத்துடன் விவாகரத்து விடயம் நிறைவு பெறும் வரை அந்த நாட்டில் மற்றொரு பகுதியான டிப்லிஸி எனும் இடத்தில் வசிக்கும் தன் பெற்றோருடன் இருக்க தீர்மானிக்கிறார்.  இதனைத் தொடர்ந்து உன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு நானே காரில் அழைத்துச் சென்று விடுகிறேன் என்று கூறி, இருவரும் காரில் பயணிக்க தொடங்குகிறார்கள்.

அந்த நீண்ட நெடிய நெடுஞ்சாலை பயணத்தின் போது எதிர்பாராத விதமாக ஒரு வாகனத்தின் மீது மோதுவதை தவிர்க்கிறார் அர்ஜுன். ஆனால் அந்தக் காரில் வந்தவர்கள் அர்ஜுனை எச்சரித்துவிட்டு செல்கிறார்கள். சிறிது தூரம் சென்றதும் பெற்றோல் நிரப்புவதற்காக காரை நிறுத்தும் போது அந்த இடத்தில் தமிழ் பேசக்கூடிய நபர்களான ரக்ஷித் ( அர்ஜுன்) அவரின் மனைவி தீபிகா ( ரெஜினா கசண்ட்ரா) ஆகியோரின் அறிமுகம் கயலுக்கு கிடைக்கிறது. அதன் பிறகு நெடுஞ்சாலை பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் போது கார் ரிப்பேர் ஆகிறது. ஆள் அரவமற்ற -செல்போன் தொடர்பு இல்லாத, அந்த நெடுஞ்சாலையில் தம்பதிகள் இருவரும் தனியாக தவிக்கிறார்கள். இந்தத் தருணத்தில் அந்த வழியாக ரக்ஷித், தீபிகா என இருவரும் சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருக்க, அவர்களிடம் உதவி கேட்கிறார் கயல். அர்ஜுனிடம்  ‘அருகில் இருக்கும் நெடுஞ்சாலை உணவகம் ஒன்றில் கயலை இறக்கிவிட்டு காத்திருக்குமாறு சொல்கிறேன். நீங்கள் காரை சரி செய்தவுடன் அங்கு வாருங்கள் அதன் பிறகு இருவரும் சேர்ந்து பயணிக்கலாம்’ என ரக்ஷித் ஆலோசனை சொல்கிறார். இந்த ஆலோசனை அர்ஜுனுக்கு சரியென மனதில் பட, அவர்களுடன் கயலை அனுப்பி வைக்கிறார். சிறிது நேரம் கழித்து அர்ஜுன் பயணித்த கார் சரியான பிறகு, அர்ஜுன் திட்டமிட்டபடி அருகில் உள்ள நெடுஞ்சாலை உணவகத்திற்கு வருகிறார். அதன் பிறகு கயல் கடத்தப்பட்டார் என்ற விவரம் தெரிய வருகிறது. அவர் ஏன் கடத்தப்பட்டார் ? அர்ஜுன் அவரை மீட்டாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தின் முதல் பாதி மெதுவாக செல்கிறது. பார்வையாளர்கள் யூகிக்கும் காட்சிகள் வரிசையாக வர சோர்வும் ஏற்படுகிறது. கயல் கடத்தப்பட்டார் என்ற விவரம் தெரிய வரும் போது தான் திரைக்கதை சூடு பிடிக்கிறது. அதன் பிறகும் ஜெட் வேகத்தில் பயணிக்காமல் நிதானமாகவும், சற்று விறுவிறுப்பாகவும் மாறி மாறி கதை செல்கிறது. இதனால் சுவாரசியம் என்பது சிறிது தான் ரசிகர்களுக்கு கிடைக்கிறது.

அர்ஜுன் – தீபிகா ஆகிய இருவரை பற்றிய பிளாஷ்பேக் காட்சிகளில் வழக்கமான கடைந்தெடுத்த கமர்சியல் ஃபார்முலா இருப்பதால் எந்த திருப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. உச்சகட்ட காட்சியில் சிறிது நேரம் பரபரப்பும் , விறுவிறுப்பும் இருக்கிறது.

அஜித் குமார் போன்ற மாஸான ஹீரோக்களுக்கு ஏற்ற கதையை தெரிவு செய்யாமல் சாதாரண மனிதன் சந்தர்ப்பம் கிடைக்கும் போது தன்னுடைய புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவது போன்ற கதை இருப்பதால் ஒரு தரப்பு ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கிறது.

அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜித் குமார் தன்னுடைய உடல் மொழிக்கும் , உடல் எடைக்கும் எம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதனை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் கூட அதிரடி காட்டாமல் அடக்கியே வாசிக்கிறார்.

அஜித் குமார் படத்தின் கதையை தன் தோளில் சுமந்து இருந்தாலும்… சில இடங்களில் தன் அனுபவம் மிக்க நடிப்பையும் வழங்க தவறவில்லை. இருந்தாலும் இளம் வயது அஜித்தை பார்க்கும் போது ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ என்ற கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

ஆரவ்- அஜித் காரில் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சி அற்புதமாக இருக்கிறது.

படத்தில் அஜித் குமாருக்கு நிகராக தன் பங்களிப்பை முழுமையாக வழங்கி ரசிகர்களுக்கு ஆறுதலை தருகிறார் அனிருத். இவரின் பாடலும், பின்னணி இசையும் தரமான சம்பவம். அதிலும்  ‘அஜித்தே..’ என குரல் வழியாகவும் பின்னணி இசையை அமைத்திருப்பது ரசிகர்களை உற்சாகப் பட வைத்திருக்கிறது.

கயல் பாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷா வழக்கம்போல் முதல் பாதியில் கதையின் நாயகியாகவும், இரண்டாம் பாதியில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.

அஜித் குமார் – அனிருத் என  இருவரையும் கடந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். கடவுச்சீட்டு, விசா என எதுவும் இல்லாமல் அஜர்பைஜான் நாட்டின் நிலவியல் அழகையும் , மக்களின் வாழ்வியலையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தி வியக்க வைக்கிறார்.

அர்ஜுனும், ரெஜினா கசண்ட்ராவும் இயக்குநர் என்ன சொன்னாரோ அதனை மட்டும் செய்திருக்கிறார்கள்.

‘பிரேக் டவுன்’ எனும் ஹொலிவுட் படத்தினை தழுவி தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதனை நம்ம ஊர் அஜித்தின் ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றம் செய்யாமல் அஜித்தின் விருப்பப்படி படத்தை இயக்கியிருக்கக்கூடும் என்பதால் மகிழ் திருமேனியை  மன்னித்து விடலாம். இருந்தாலும் உங்களுடைய படத்தில் தொடர்ந்து கெமிக்கல் ஃபேக்டரி இடம்பெறுவது ஏன்? என்ற ரகசியத்தை சொல்லலாம்.  தன் காதலியின் பிறந்த நாளை கண்டுபிடிப்பதற்காக.. காதலன் தினமும் காதலிக்கு பர்த்டே மெசேஜ் அனுப்புவது மகிழ்திருமேனியின் ஸ்பெஷல் டச்.

விடா முயற்சி – வீணான முயற்சி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More