தயாரிப்பு கீதா ஆர்ட்ஸ்
நடிகர்கள் : நாக சைதன்யா , சாய் பல்லவி, ‘ஆடுகளம்’ நரேன், கருணாகரன், திவ்யா பிள்ளை, பப்லு பிரித்விராஜ், மைம் கோபி, பிரகாஷ் பெலவாடி மற்றும் பலர்.
இயக்கம் : சந்து மொண்டேட்டி
மதிப்பீடு : 2.5 / 5
தெலுங்கு திரையுலகிலிருந்து பான் இந்திய அளவிலான படைப்புகள் தயாராகி ரசிகர்களை வந்தடையும் போது அதற்கான எதிர்பார்ப்பு என்பது எப்போதும் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் உண்மை சம்பவத்தை தழுவி தயாரான இந்த ‘தண்டேல்’ திரைப்படத்திற்கு இயல்பான அளவைவிட கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதனை படக் குழுவினர் பூர்த்தி செய்தார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகா குளம் எனும் பகுதியிலுள்ள மீனவரான ராஜு( நாக சைதன்யா) அதே பகுதியில் வசிக்கும் சத்யா( சாய் பல்லவி)வை காதலிக்கிறார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு காதலித்து வருகிறார்கள். ஒன்பது மாதம் கடல் சார்ந்த தொழில் முறையிலான வாழ்க்கை- மூன்று மாதம் குடும்பம் சார்ந்த நிலவியல் வாழ்க்கை- எனும் வாழ்வியல் முறையை கொண்டிருக்கும் அப்பகுதி மீனவர்களுக்கு ராஜு தலைவனாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
ஆனால் ராஜு மீது அளவுகடந்த காதல் கொண்டிருக்கும் சத்யா இந்த வாழ்க்கை வேண்டாம் மாற்று வாழ்க்கையை தெரிவு செய்வோம் என தன் உணர்வை வெளிப்படுத்துகிறார். ஆனால் ராஜு இதனை ஏற்காமல் தன் வழக்கமான பணியை தொடர்கிறார். இதனால் ராஜு மீது சத்தியா கோபம் கொள்கிறார். இந்த தருணத்தில் ஒரு முறை ராஜு வழக்கம்போல் மீன் பிடிப்பதற்காக குஜராத் எல்லைக்கு செல்ல, அங்கு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறிய படகு ஒன்றினை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் போது, எதிர்பாராத விதமாக இந்திய கடல் எல்லையை கடந்து அண்டை நாடான பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் இவர்களுடைய படகு சென்று விடுகிறது. இதனால் கடல் எல்லையை கடந்து அத்துமீறி மீன்பிடித்ததற்காக ராஜு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது. இதன் பிறகு ராஜூவும், சத்யாவும் மீண்டும் ஒன்றிணைந்தார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.
முதல் பாதியில் மீனவர்களின் வாழ்வியல் முறையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மறைந்திருக்கும் கடினங்களையும், உணர்வுபூர்வமாகவும் ஜனரஞ்சகமாகவும் விவரித்திருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் கதை பாகிஸ்தான் சிறைக்குள் சென்றதும் தடுமாறத் தொடங்குகிறது. தேசபக்தி, எக்சன், ஹீரோயிசம், என பாதை மாறி பயணித்து பார்வையாளர்களை சோதிக்கிறது. சாய் பல்லவியின் கோணத்தில் நகரும் காட்சிகள் அனைத்தும் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ரோஜா’ படத்தினை நினைவு படுத்துகிறது. இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக சர்வதேச தரத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதால் படத்தை ஓரளவு ரசிக்க முடிகிறது.
நாக சைதன்யா, ராஜு எனும் மீனவ இளைஞன் கதாபாத்திரத்திற்காக தன்னை உடல்ரீதியாக வருத்திக் கொண்டு அற்புதமாக நடித்திருக்கிறார். எக்சன் காட்சிகளில் அதிரடி காட்டி இருக்கிறார். பல காட்சிகளில் ‘புஷ்பா’ படத்தின் நாயகனான அல்லு அர்ஜுனின் பாணியை தன் ஸ்டைலில் கொப்பியடித்திருக்கிறார்.
சாய் பல்லவி- சத்யா கதாபாத்திரத்திற்காக தன் தனித்துவமான நடிப்பை வழங்கி இருந்தாலும், காதலனிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் குணாதிசயம் கொண்ட பெண்ணாக நடிப்பதில் விசேட கவனம் செலுத்தி இருக்கிறார். இது பார்வையாளர்களை கவர்கிறது. அதில் இந்த கதாபாத்திரத்தின் தனித்துவமும் தெரிகிறது.
படத்தின் திரைக்கதை பலவீனமாக இருந்தாலும், ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக முதல் பாதியில் வரும் பாடல்கள் தனி கவனம் பெறுகிறது.
நாக சைதன்யா- சாய் பல்லவி இவர்களை கடந்து கதையை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன், திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், மைம் கோபி ஆகியோர்களின் நடிப்பும் சிறப்பு.
உண்மை சம்பவத்தை தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் லாஜிக் மீறல்கள் எக்கச்சக்கம். குறிப்பாக பாகிஸ்தான் சிறையில் நடைபெறும் சம்பவங்கள்.
தண்டேல் – லீடர் அல்ல பூமர்.